பரபரப்பான கட்டத்தில் டை ஆன டி20 போட்டி! சூப்பர் ஓவரில் கோட்டை விட்ட இலங்கை அணி

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது.
இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கேப்டவுனில் நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 7 ஓட்டங்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. கமிந்து மெண்டிஸ் மட்டும் அதிரடியாக 29 பந்துகளில் 41 ஓட்டங்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
20 ஓவர்கள் ஆடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் பிலுக்வாயோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிக்ஸ் 8 ஓட்டங்களும், டி காக் 13 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர். பின்னர் வந்த டு பிளிசிஸ் 21 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
எனினும், ரஸ்சி வான் டர் டூசன் மற்றும் டேவிட் மில்லர் அபாரமாக விளையாடினர். இவர்களது கூட்டணி 66 ஓட்டங்கள் குவித்தது. இந்நிலையில் வான் டர் டூசனை 34 ஓட்டங்களில் மலிங்கா வெளியேற்றினர்.
அதனைத் தொடர்ந்து டேவிட் மில்லர் 41 ஓட்டங்களில் அவுட் ஆனார். இதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. பரபரப்பான கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியும் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் எடுத்ததால் போட்டி ‘டை’ ஆனது.
இலங்கை தரப்பில் மலிங்கா 4 ஓவர்களில் 11 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் காரணமாக சூப்பர் ஓவர் முறை முடிவு செய்யப்பட்டது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 14 ஓட்டங்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை அணியில் திசாரா பெரேரா மற்றும் பெர்ணான்டோ இருவரும் களமிறங்கினர். இம்ரான் தாஹிரின் சுழற்பந்தில் இலங்கை அணி திணறியது. இதனால் ஒரு ஓவரில் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்