தமிழகத்துக்கும் தலைமன்னாருக்கும் கப்பல் சேவை நடத்தினால் ஈழத்தமிழர்கள் நாடு திரும்புவர்!ஜெனீவாவில் புதிதாக நிறைவேற்றப்பட்ட 40 இன் கீழ் ஒன்று தீர்மானத்திற்கு இணை அணுசரணை வழங்கிய ஸ்ரீலங்கா அரசு யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறைக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்டு வருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கம் உள்நாட்டில் நாட்டு மக்களுக்கு ஒரு கருத்தையும், சர்வதேசத்திற்கு இன்னுமொரு கருத்தையும் தெரிவித்து கபட இராஜதந்திரத்தை கையாள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
போர் குற்ற விசாரணைகள் தொடர்பில் கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது எனின், எதற்காக ஜெனீவா தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ள நிர்மலநாதன், கலப்பு நீதிமன்றத்தை ஏற்க முடியாதுவிட்டால் ஸ்ரீலங்கா பிரதமர் தலைமையிலான அரசாங்கம் ஜெனீவாவில் அதற்கு எதிரான தமது தீர்மானத்தை அறிவித்திருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற, வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இந்த விடயங்களை முன்வைத்திருக்கின்றார்.
தமிழகத்திற்கும், தலை மன்னாருக்கும் இடையிலான கப்பல் சேவையை, அரசாங்கம் விரைந்து ஆரம்பிக்க வேண்டுமெனவும் வலியுறுத்திய சார்ள்ஸ் நிர்மலநாதன், அவ்வாறு ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் நாடு திரும்புவதற்கு இலகுவானதாக அமையுமெனவும் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்