சென்னையின் கலாசாரத்தையும் சூழலையும் நான் அதிகம் விரும்புகிறேன்: கேதர் ஜாதவ்12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னையில் நாளை தொடங்குகிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பிரத்யேக பொருட்கள் ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், ‘ஆல்-ரவுண்டர்’ கேதர் ஜாதவ் ஆகியோர் பங்கேற்று பொருட்களை அறிமுகம் செய்து வைத்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் கூறியதாவது:-
‘உலக கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்பது எல்லா கிரிக்கெட் வீரர்களின் கனவாக இருக்கும். அதில் நானும் விதிவிலக்கு அல்ல. அடுத்த 2 மாதங்கள் எனது கவனம் எல்லாம் ஐ.பி.எல். போட்டியில் தான் இருக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கலாசாரத்தையும், சூழலையும் நான் அதிகம் விரும்புகிறேன். கடந்த ஆண்டு நான் இங்கு 10 நாட்கள் மட்டுமே இருந்தேன். காயத்தால் கடந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றிய அழகிய தருணத்தை நான் தவற விட்டேன்.
கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். இந்த சீசனில் நான் முழுமையாக விளையாடுவதை எதிர்நோக்கி இருக்கிறேன். அணிக்கு சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
இந்திய அணிக்காக விளையாடுகையில் பந்து வீசிய ஓவர்கள் அளவுக்கு ஐ.பி.எல். போட்டியில் பந்து வீச வேண்டியது இருக்காது என்று நினைக்கிறேன். நாங்கள் எல்லோரும் தொழில்முறை வீரர்கள். எங்களது உடல் தகுதியை எப்படி பேண வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.
ஒவ்வொரு ஆட்டத்திற்கு பிறகும் உடல் சோர்வில் இருந்து மீண்டு வருவது முக்கியமானதாகும். புத்துணர்ச்சியுடன் இருந்தால் தான் நன்றாக செயல்பட முடியும். பணிச்சுமை என்பது ஒவ்வொரு வீரருக்கும் வித்தியாசப்படும். எங்களுடைய டிரெய்னர் மற்றும் பிசியோதெரபிஸ்டுடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்கள் வழங்கும் அறிவுரையை அப்படியே ஏற்று செயல்படுவோம். மேற்கண்டவாறு கேதர் ஜாதவ் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்