யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி


இலங்கையின் தெற்கே ஹம்பாந்தோட்டை மாவட்டம் பெலியத்தையில் இருந்து வடக்கே யாழ்ப்பாணம்வரை தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது மாத்தறையில் இருந்து கண்டிக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடும் உத்தரதேவி தொடருந்து எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக் காலப்பகுதியில் பெலியத்தையில் இருந்து சேவையை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த தொடருந்துச் சேவை அடுத்த மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது. பெலியத்தையில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான சேவைக்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய தொடருந்து இயந்திரம் ஒன்று இணைத்துக் கொள்ளப்பட உள்ளது.
இந்தியாவிலிருந்து 6 தொடருந்து இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதுடன் இதில் இரண்டு தொடருந்து இயந்திரங்கள் எதிர்வரும் புதன்கிழமை சென்னை துறைமுகத்திலிருந்து கொழும்புக்கு கொண்டுவரப்பட உள்ளது.
இதில் ஒன்று கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையிலும், மற்றைய இயந்திரம் பெலியத்தை-யாழ்ப்பாணத்திற்கு இடையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொடருந்து இயந்திரம் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் ஏற்கனவே சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்