இனியும் தமிழர்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது! வடக்கு ஆளுநர்


இலங்கை இராணுவத்தில் உள்ள சில அதிகாரிகள் மற்றும் சில இராணுவச் சிப்பாய்கள் போர்க் குற்றங்களை செய்துள்ளார்கள். அவர்களை தண்டிக்கவேண்டும் என இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்கவே கூறியிருக்கின்றார்.
இவ்வாறு குற்றமிழைத்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, அது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு சிவில் சட்டத்தின் கீழும், இராணுவச் சட்டத்தின் கீழும் இரட்டை தண்டணை விதிக்கப்படவேண்டும்.
இனியும் தமிழர்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது” என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டுவிட்டு நாடு திரும்பியுள்ள வடமாகாண ஆளுநர் இன்று யாழ்.பழைய பூங்கா வளாகத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

இதன்போது கலப்பு நீதிமன்றப் பொறிமுறைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ளமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குபதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கை அரசாங்கம் இனிமேலும் காலதாமதம் காட்டாமல் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும்.
இனிமேலும் தமிழர்களை ஏமாற்ற முடியாது. சாட்சிகள் ஊடாக சந்தேகத்திற்கிடமற்ற முறையில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட இராணுவத்தினருக்கு தண்டணைகளை வழங்கவேண்டும்.
இராணுவத்தில் உள்ள சிலர் குற்றங்களை செய்திருக்கின்றார்கள் என இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்கவே கூறியுள்ளார். அவர்களை எந்த நிலைக்கும் சென்று தண்டிப்பதற்கு தயாராக இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
அந்தவகையில் சிவில் சட்டத்தின் கீழும், இராணுவ சட்டத்தின் கீழும் குற்றமிழைத்தவர்களுக்கு இரு தண்டணைகள் வழங்கப்படவேண்டும். மேலும் காணாமல்போனவர்கள் அலுவலகம் ஊடாக நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும்.
அவர்களுக்கு இந்த வரவு செலவு திட்டத்திலும் 1.3 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.
ஆகவே இந்த வருடம் செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாக வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் கிளை காரியாலங்களை அமைக்கவேண்டும்.
அதனோடு காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களை அணுகி உங்களுக்கு என்ன வேண்டும்? நீதி வேண்டுமா? இழப்பீடு வேண்டுமா? என்பதை அவர்களுடைய வாயால் அறியவேண்டும்.
அங்கே அரசியல் கலப்புக்கள் இருக்ககூடாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு என்னவேண்டும் என்பதை அரசியல் கட்சிகள் தீா்மானிக்ககூடாது.
அவ்வாறு தீா்மானிப்பது சரியானதும் அல்ல. மேலும் இலங்கை அரசாங்கம் மக்களுக்கு என்ன சொல்கிறதோ அதனையே சர்வதேச சமூகத்திற்கும் சொல்லவேண்டும்.
சர்வதேச சமூகத்திற்கு ஒரு கதையும், இலங்கை மக்களுக்கு இன்னொரு கதையும் கூறக்கூடாது. அதாவது தங்களால் என்ன செய்ய முடியுமோ அதனையே கூறவேண்டும்.
செய்ய முடியாத அல்லது செய்ய இயலாத விடயங்களை சா்வதேசத்திற்கு கூற கூடாது. இந்நிலையில், காலத்தை வீணடிக்கும் செயற்பாட்டை அரசு நிறுத்தவேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
வடமாகாணத்தில் உள்ள 14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயா்த்தும் யோசனையை நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு முன்வைத்து அது தொடா்பான தீா்மானம் எடுக்கும் உரிமையையும் அவா்களிடம் கொடுத்தேன். ஆனால் நான் நாட்டில் இல்லாத சமயம் பல அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
ஆனால் நான் பாரிய தவறை செய்து விட்டேன். அது என்னவென்றால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதிவிட்டேன். என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வடமாகாணத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை கேலி செய்துள்ளார்.
ஆளுநர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் என்னிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.
அந்த கோரிக்கையில் வடக்கில் உள்ள மாகாண பாடசாலைகள் சிலவற்றை தேசிய பாடசாலைகளாக தரம் உயா்த்தும் படி கேட்டிருந்தனர்.
இந்த விடயத்தை ஆராய்ந்த போது தேசிய பாடசாலைகளுக்கு மத்திய அரசிடமிருந்து நிதி உதவிகள் நேரடியாக கிடைக்கும்.என்பதாலும் இலங்கையில் உள்ள மற்றைய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் 3.5 வீதம் தேசிய பாடசாலைகளாக உள்ள நிலையில் வடக்கில் 2 வீதமான பாடசாலைகளே தேசிய பாடசாலைகளாக உள்ளமையாலும் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயா்த்தலாம் என்ற யோசனை எமக்கு கிடைத்தது.
அதனடிப்படையில் வடக்கில் உள்ள சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடந்த 18.03.2019 ஆம் திகதி கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். அதில் இவ்வாறு தேசிய பாடசாலைகளாக 14 பாடசாலைகளை தரம் உயா்த்தும் யோசனை உள்ளது.
அதனை நீங்கள் விரும்புகிறீா்களா? அவ்வாறு விரும்பினால் தங்கள் பகுதியில் உள்ள எந்த பாடசாலையை நீங்கள் தோ்வு செய்கிறீா்கள்? என தீா்மானம் எடுக்கும் பொறுப்பை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கொடுத்தேன். மாறாக நான் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை.
நான் நாட்டில் இல்லாத சமயம் பல அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அறிக்கை அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை. சகல விடயங்களையும் பேசி தீா்க்கலாம் என்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கின்றது. அது ஒரு புறமிருக்க 13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக ஆதரிப்பவன் நான்.
அதில் ஒரு சிறு துளியை கூட விட்டுக் கொடுக்க கூடாது எனவும் நான் திடமாக இருக்கிறேன். இந்நிலையில் பலர் பலவாறாக அறிக்கைகளை விட்டிருக்கின்றார்கள். ஆனால் இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை. மாணவா்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி இராஜங்க அமைச்சர் ஆகியோருடைய கோரிக்கையை எடுத்து அதனை ஒரு யோசனையாக மாற்றி தீா்மானிக்கும் பொறுப்பை நாடாளுமன்ற உறுப்பினா்களிடம் தான் கொடுத்தேன்.
ஆனால் விடயம் வேறு மாதிரியாக மாற்றப்பட்டுள்ளது. நான் ஒரு தவறு செய்து விட்டேன். நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு அனுப்பிய கடிதத்தை ஆங்கிலத்தில் அனுப்பியது தவறு தான் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்