ஜெனிவா தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்துமா?


ஐக்கிய நாடுகள் சபையின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்பதில் எனக்கு நம்பவில்லை என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிவுரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர்,
கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் சர்வதேச நீதிபதிகளுடன் இணைந்து இலங்கையில் நடைபெற்ற யுத்த குற்றத்தை விசாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கி கைச்சாத்திட்டது. அதேபோன்று 2017 ஆம் ஆண்டு அதே தீர்மானம் 34/1 தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுமென்று இலங்கை அரசாங்கம் இணங்கி கைச்சாத்திட்டது. ஆனால், இலங்கை அரசாங்கத்தால் முன்னேற்றங்கள் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் 2019ம் ஆண்டு 40/1 தீர்மானம் அண்மையில் இலங்கை அரசாங்கத்தின் சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்த தீர்மானத்தையும் சர்வதேச மேற்பார்வையின் கீழ் இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் இலங்கை அரசாங்கம் இதை நடைமுறைப்படுத்துமென்று நான் நம்பவில்லை.
இந்த 40/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை எனில், சகல தமிழ் கட்சிகளும், சகல புலம்பெயர் அமைப்புக்களும் ஒன்றாக இணைந்து 24 நாடுகளுடைய ஆதரவை பெற்று இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாத விடயங்களை சர்வதேசத்தால் நடைமுறைப்படுத்துகின்ற தீர்மானம் ஒன்றை ஐ.நா.மனித உரிமை பேரவையில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்