இந்திய தேர்தல் எதிரொலி! இலங்கைத் தமிழர் விவகாரத்தை கையில் எடுத்துள்ள தமிழகத்தின் இருபெரும் கட்சிகள்

இந்திய லோக்சபா தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டள்ள நிலையில், தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளின் பங்கீடுகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டும் கூட்டணிகளை பங்கீடு செய்து, அதற்கான தொகுதிகளையும் அறிவித்துக் கொண்டிருக்கின்றன.
இம்முறை கூட்டணிகள் பெரிதாக இருப்பதனால் தமிழகத் தேர்தல் கடும் சூடுபிடிக்கும் என இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்றால் போல தேர்தல் அறிக்கைகளிலும் கனதியான பல விடையங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்நிலையில், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை தேவை என்று மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் கோரிக்கையை உள்ளடக்கியிருக்கிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை கைதிகளான ஏழு பேரையும் விடுவிக்கவேண்டும். கச்சத்தீவில் இந்திய மீனவர்களுக்கு உரிய உரிமத்தை இந்திய மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தினால் சென்னையில் வெளியிட்டு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிக்கையில், இந்தியாவில் பல்வேறு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரும் இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சேதுசமுத்திரத் திட்டத்தை அமுலாக்கல், மீனவர் பிரச்சினை தீர்வு ஆகிய விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தல் பெரும் எதிர்ப்பார்ப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இரு கட்சிகளினதும் அறிக்கை இலங்கைத் தமிழ் மக்களின் நலன்குறித்தும் பேசுவது தேர்தலுக்கான உத்தியன்றி வேறு இல்லை என விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்