ஜெனிவாவில் நாளை நடக்கப் போகும் பயங்கரம் பற்றி கூறும் தென்னிலங்கை அரசியல்வாதி


நாட்டின் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதம் நடைபெற்று வரும் வேளையில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நாளைய தினம் பயங்கரமான சம்பவம் நடக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து தலைவர்களும் கையெழுத்திட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்புவது என தீர்மானித்தனர்.
அந்த கடிதத்தை நேற்று ஜனாதிபதியை சந்தித்து கையளித்த பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் விடயங்களை தெளிவுப்படுத்தினர். மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத் தொடரில் இலங்கை சம்பந்தமாக முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைக்கு இணை அனுசரணை வழங்க வேண்டாம் என அங்கு சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகளுக்கு உடனடியாக உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டோம். இணை அனுசரணை வழங்குவதில் இருந்து விலகிக்கொள்ளுமாறு உத்தரவிடுமாறும் கோரினோம்.
இலங்கை சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனையை நிறைவேற்ற எந்த ஒத்துழைப்புகளை வழங்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டோம். இதற்கு எதிராக வாக்களிக்கும் ஏனைய நாடுகளை கோருமாறும் தெரிவித்தோம். இந்த கோரிக்கைகளை விடுக்க பல காரணங்கள் உள்ளன. இந்த யோசனை 5 நாடுகள் இணைந்து முன்வைத்துள்ளன.
இதில் ஆசிய நாடுகளோ, லத்தீன் அமெரிக்க நாடுகளோ, ஆபிரிக்க நாடுகளோ இந்த யோசனையில் கையெழுத்திடவில்லை. இதில் கையெழுத்திட்டுள்ள ஒரே ஆசிய நாடு இலங்கை என்பதே இதில் உள்ள துரதிஷ்டம்.
எமது படையினருக்கு எதிரான இந்த யோசனையை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கம் கோரியிருப்பது மிகவும் சோகமான நிலைமை எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்