உலகக் கோப்பையில் நான் விரும்பும் அணியினர் யார்? - அனில் கும்ப்ளே பட்டியலஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே உலகக் கோப்பையில் பங்கேற்க வேண்டிய வீரர்கள் குறித்த அவரது விருப்ப அணி பட்டியலை வெளியிட்டுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் 2019 வரும் மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இதற்காக பல கிரிக்கெட் அணிகள் தீவிர பயிற்சியை செய்துவருகின்றன. மேலும் பல நாடுகள் தங்களின் உத்தேச அணியை தேர்வு செய்யும் முனைப்பிலும் ஆர்வம் காட்டி வருகின்றன.


அதேபோல இந்திய அணியும் தற்போது தனது அனைத்து சர்வதேச போட்டிகளை முடித்துவிட்டு உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வும் ஓரளவு முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரும் இதனை உறுதி செய்துள்ளார்.


இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளரான அனில் கும்ப்ளே உலகக் கோப்பையில் விளையாடும் தனது விருப்பமான அணி குறித்த ஒரு தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ‘கிரிக்கெட்நெக்ஸ்ட்’ தளத்திற்கு பேசி உள்ளார். அதில், “உலகக் கோப்பையில் விளையாடும் என்னுடைய உத்தேச அணி இதுதான்: ரோகித் சர்மா, ஷிகார் தவான், விராட் கோலி, சஹால், பும்ரா, ஷமி, பாண்டியா, தோனி, கேதார் ஜாதவ், புவனேஷ்வர் குமார். இவர்களுடன் ஆல்ரவுண்டராக விஜய் சங்கர் இருப்பார். ஏனென்றால் ஜடேஜாவுடன் ஒப்பிடுகையில் விஜய் சங்கர் நல்ல பேட்ஸ்மேன். அத்துடன் அவர் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்” எனக் கூறியுள்ளார்.
மேலும் கும்ப்ளே தேர்வு செய்த அணியில் பந்துவீச்சில் புதிதாக கலில் அஹமத் உள்ளார். தோனிக்கு மாற்று கீப்பராக ரிஷப் பந்த் உள்ளார். அத்துடன் கும்ப்ளேயின் அணியில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்