ஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் !அஜித் நடித்த விஸ்வாசம்' படத்தின் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா உள்ளிட்டோர் நடித்த படம் 'விஸ்வாசம்'. இந்த படம் கடந்த ஜனவரி 10ம்தேதி, ரஜினியின் 'பேட்ட' படத்துடன் வெளியானது. 

தமிழகத்தில் விஸ்வாசம் படத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. வெளியாகி ஏழு வாரத்துக்கு மேலாக 110 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இந்த படத்தால் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது. 

இந்நிலையில் இந்த படத்தின் வசூல் நிலவரம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், வசூல் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தற்போது தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘விஸ்வாசம் படம்தான் என் வாழ்நாளிலேயே சிறந்தது. இது ப்ளாக்பஸ்டர் வெற்றி. இதற்காக அஜித், இயக்குநர் சிவா அவர், குழுவுக்கும் தான் மொத்த பாராட்டும் செல்ல வேண்டும்.

தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி முதல் ரூ.135 கோடி வசூல் செய்துள்ளது. விநியோகிஸ்தர்களின் பங்கு ரூ.70 - 75 கோடி வரை கிடைக்கும். குடும்பம் குடும்பமாக வந்து ரசிகர்கள் படம் பார்க்கின்றனர். அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங் தான், அவரின் ரசிகர்கள் ஏராளம். ரசிகர் மன்றங்களைக் கலைத்தாலும் அவருக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. சிறு நகரங்களில் இன்னும் குடும்பத்துடன் பார்க்கும் படங்களுக்கு வரவேற்பு உள்ளது.’ என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்