மனித உரிமைகள் தொடர்பில் சரியான நேரத்தில் முடிவெடுக்க வேண்டும்!


ஸ்ரீலங்கா அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பிலான விவகாரங்களில் சரியான நேரத்தில் நடவடிக்கைகளை எடுப்பது, நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்ததாக அமையுமென என ஐக்கிய அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
சமாதானம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில், ஸ்ரீலங்காவின் புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டை அமெரிக்கா வரவேற்கிறது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
'நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல், ஆகியவற்றிற்கு ஸ்ரீலங்காவின் புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டை நாங்கள் வரவேற்கின்றோம். விவகாரங்களில் சரியான நேரத்தில் நடவடிக்கைகளை எடுப்பதானது, அனைத்து ஸ்ரீலங்கா பிரஜைகளுக்கும் சமாதானமான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்கும்" என அமெரிக்கத் தூதரகத்தின் ட்விட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவிற்கு மேலும் இரண்டுவருட கால அவகாசம் வழங்கும் பிரேரணை வாக்கெடுப்பின்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரில் நேற்று முன்தினம் நிறைவேறியுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவின் பொறுப்புக் கூறல், நிலைமாறு கால நீதிப் பொறிமுறை, நல்லிணக்கம் மற்றும் மீள் நிகழாமை ஆகியவற்றை அடிப்படையாக் வைத்து 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30 இன் கீழ் ஒன்று மற்றும் 2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 34 இன் கீழ் ஒன்று ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் வகையில் 40இன் கீழ் ஒன்று என்ற இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
ஜெனீவா அமர்வுகளில் நேற்றைய தினம் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் குழுவின் தலைவராக கலந்துகொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு வாக்குறுதி அளித்த வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளிட்ட சட்ட நிபுணர்களை உள்ளடக்கி கலப்பு நீதிமன்றமொன்றை அமைக்க ஸ்ரீலங்காவின் அரசியல் சாசனத்தில் இடமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை போரை முடிவுக்கு கொண்டுவந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர் உட்பட அரச படையினரின் உரிமைகளை பறிக்க தமது அரசாங்கம் தயார் இல்லை என்ற அரசின் உறுதியான நிலைப்பாட்டையும் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில் தெளிவாக எடுத்துரைத்திருந்தார்.
எவ்வாறாயினும் போர் குற்ற விசாரணைகளுக்கான கலப்பு நீதிமன்ற பொறிமுறை உட்பட இறுதிக்கட்ட போரின் போது நிகழ்ந்த கொடூரங்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் 30இன் கீழ் ஒன்று மற்றும் 34 இன் கீழ் ஒன்று ஆகிய தீர்மானங்களை காலவரையரையுடன் நிறைவேற்றுவதற்கு இணங்கும் 40 இன் கீழ் ஒன்று தீர்மானத்தை எதிர்பின்றி நிறைவேற்ற ஸ்ரீலங்கா அரசு அனுமதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
ஸ்ரீலங்காவில் நல்லிணக்கத்தை மேம்படுத்தல், பொறுப்புக்கூல் மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல் என்ற தலைப்பில் இந்த புதிய பிரேரணை ஜெனீவாவில் நிறைவேறியது.
இந்தப் பிரேரணை நிறைவேற்றப்படுவதற்க எந்தவொரு நாடுகளும் எதிர்ப்பையும், ஆட் சேபனையையும் வெளியிடாததால் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேறியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்