போர் குற்ற விசாரணை அவசியம்! இலங்கை அரசை நம்பமுடியாது?இந்தியா அதிகாரி


ஐ.நா.வில் இலங்கையின் எந்த அரசு எத்தகைய உறுதி அளித்தாலும் செயல்பாட்டில் இழுபறி தொடரும். ஆகவே தென்னாபிரிக்காவைப் போன்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைளை உடன் முன்னெடுக்க வேண்டும். அத்துடன் நாட்டின் நலனுக்காக போர்க்குற்ற விசாரணை அவசியமாகும். இவ்வாறு, இந்திய இராணுவத்தின் ஓய்வு நிலை புலனாய்வு நிபுணர் கேர்ணல் ஆர்.ஹரிகரன் கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் பத்தரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஜெனீவா கூட்டத்தொடர் தற்பொது நடைபெற்று வரும் நிலையில் படையினர் இழைத்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் வலியுறுத்தப்படுகின்றது. ஆனால் அரசியல் தலைவர்களான, மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்,எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உள்ளிட்ட பெரும்பான்மை தரப்பினர் ஒரு படைவீரர் கூட தண்டிக்க இடமளிக்க முடியாது என்கிறார்கள்.
மேலும் விடுதலைப்புலிகளும் யுத்தக் குற்றங்களை புரிந்துள்ளதால் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகியுள்ளவர்களை மீண்டும் கைதுசெய்து இருதரப்பு குற்றங்கள் தொடர்பிலும் ஆரம்பத்திலிருந்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் பிறிதொரு தரப்பினர் வாதங்களை முன்வைக்கின்றார்கள்.
இராணுவத்தில் மூத்த அதிகாரியாக செயற்பட்ட நீங்கள் படையினர் தொடர்பில் இவ்வாறு முன்வைக்கப்படுகின்ற குற்றங்கள் குறித்து அரசாங்கம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று கூற விரும்புகின்றிர்கள்? என எழுப்பப்பட்ட வினாவுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஒவ்வொரு போரும் அதன் நிகழ்வுக்கான சமூக அரசியல் சூழ்நிலையில் உருவானது. ஆகவே அந்தப் போர் நடத்தப்பட்ட சூழ்நிலையில் அவற்றின் தாக்கம் இருக்கும். இலங்கையில் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை, மற்றும் போர் குற்றங்களை ஆராயும் போது அந்தப் பின்னணியில் இருந்தே பார்க்க வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுவின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படையினர் குற்றங்களை மட்டும் அல்லாது ஏனைய விடயங்களையும் ஆய்வு செய்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணமாக வெள்ளை வாகன கடத்தல் குற்றங்கள், காணாமல் போக்கடிக்கப்பட்டவர்கள், மறைக்கப்பட்டவர்கள், காணி ஆக்கிரமிப்பு, தமிழ் மக்களின் தேசியப் பங்கேற்பு ஆகியவற்றிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.
ஆகவே இத்தகைய சூழலில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப் படும் எந்த இலங்கை அரசும் 23ஆண்டுகள் தொடர்ந்த போரில் வெற்றி பெற்ற படைவீரர்களை விசாரணைக்கு உள்ளாக்கத் தயங்கும். ஆகவே ஐ.நா.வில் எந்த அரசு எத்தகைய உறுதி அளித்தாலும் செயல்பாட்டில் இழுபறி தொடரும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
அதற்குத்தான் தென்னாப்பிரிக்காவில் அதிபர் மண்டேலா உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவை அமைப்பதற்கு ஒப்புக் கொண்டார். அது இன வெறிச் சூழ்நிலையில் மாற்றத்தை கொண்டு வந்தது. ஆகவே அதை உடனே இலங்கையிலும் செயலாக்க வேண்டும்.
சமூக ஆர்வலர்கள், மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அரசாங்க மற்றும் படை உயர் அதிகாரிகள் கொண்ட ஒரு குழு உருவாக்கி அவர்கள் தொடர்ந்து வரும் இந்த சூழலில் இருந்து நாட்டை மீட்க ஐ.நா தீர்மானத்தில் குறிப்பிட்ட விடயங்களை முடிவுக்கு கொண்டு வரும் வேலைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை போர் குற்ற விசாரணையில் படையினர்; மட்டும் அல்லாது முன்னாள் போராளிகளையும் உட்படுத்த வேண்டும். அதற்குத் தயார் இல்லை என்றால் அமைக்கப்படும் உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழவில் அவர்களின்; வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அவர்கள் தங்களது குற்றங்களுக்காக வருந்தினால் பொதுமன்னிப்பு அளிக்கலாம். இது வெளிப்படையாகவே நடத்தப் படவேண்டியதாகும்.
சுருங்கச் சொன்னால் படையினர் என்பது நாட்டின் ஒரு அங்கமாகும். நாட்டின் படைகள் போரை அரசியல் வழி நடத்தும் குறிக்கோளை அடைய உதவுகிறது. போர்குற்ற விசாரணை ஐ.நா.வுக்காக மட்டுமல்லாமல் நாட்டின் நலனுக்காக எடுக்க வேண்டிய பல்வேறு முயற்சிகளில் ஒன்றே ஆகும். அதை மட்டும் தனியாக நிகழ்த்துவது மிகவும் கடினமாகும்” என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்