சீமானுக்கு ஆதரவாக பிரித்தானியா நாடாளுமன்றின் முன் குவிந்த ஈழத்தமிழர்கள்!


தலைவர் பிரபாகரனுக்கு பிறகு தமிழர்களை வழிநடத்தக்கூடிய தலைவர் சீமான்தான் என வெளிநாடு வாழ் ஈழத்தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய அரசியலை அரியணையில் ஏற்ற நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வலியுறுத்தி இன்று ஞாயிற்று கிழமை, பிரித்தானிய நாம் தமிழர் கட்சியினரால் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன் கவன ஈர்ப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
கடந்த தமிழ்நாட்டு சட்ட மன்ற தேர்தலில் நாம்தமிழர் கட்சி தொகுதிகளிலும் இரட்டை மெழுகு வர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. ஆனாலும் அது 1.1% வாக்கு சதவீதத்தையே பெற்றது. இதனால் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு அதே சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டு புதிய சின்னமாக விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியது.
வெறும் முப்பது நாட்களுக்குள் கட்சி சின்னத்தை தமிழ்நாடு முழுமைக்கும் கொண்டு சென்றாக வேண்டும் எனும் கட்டாயத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் பல்வேறுபட்ட வழிகளில் தம் கட்சி சின்னத்தை மக்களை நோக்கி பரப்பி வருகின்றார்கள்.
அதன் ஒரு அங்கமாக பிரித்தானிய நாம்தமிழர் கட்சியினர் “விவசாயி சின்னம் பொறித்த பிரமாண்டமான பதாகையை” பிரித்தானியாவின் அதி முக்கிய நகரமான வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் வைத்து கவன ஈர்ப்பு நிகழ்வொன்றை முன்னெடுத்திருந்தார்கள்.
அதில் கலந்து கொண்டு பேசிய பிரித்தானியாவின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வி.மயூரன், தமிழ் தேசிய அரசியலை அரியணையில் ஏற்ற நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று அறைகூவல் விடுத்தார்.
அதனைத்தொடர்ந்து உரையாற்றிய ஒருவர் தலைவர் பிரபாகரனுக்கு பிறகு தமிழர்களை வழிநடத்தக்கூடிய தலைவர் சீமான்தான் என தெரிவித்திருந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்