மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் இலங்கைக்கு எச்சரிக்கை!


சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம், போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை தொடர்பாக இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று இலங்கையை எச்சரித்துள்ள மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலைவர், முறையான விசாரணை நடத்தத் தவறினால் சர்வதேச நடவடிக்கையை சந்திக்க நேரிடலாம் என்றார்.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள Michelle Bachelet, போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிப்பதற்காக விசாரணை அமைப்பு ஒன்றை அமைப்பதாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பே வாக்களித்த இலங்கை, அதை இன்னும் நிறைவேற்றவில்லை என்றார்.
இலங்கையில் 37 ஆண்டுகளாக நடைபெற்று வந்த யுத்தத்தின் இறுதி கட்டத்தில், சுமார் 40,000 தமிழர்கள் வரை கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மார்ச் 2019 வாக்கில், முறையான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்வதாக இலங்கை ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது இன்னும் இரண்டாண்டுகள் தேவை என இலங்கை அதிகாரிகள் அவகாசம் கேட்டுள்ளனர்.
அவகாசம் அளிப்பதா வேண்டாமா என மன்றம் இன்று முடிவெடுக்க உள்ள நிலையில், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் இலங்கை முறையான விசாரணை எடுக்க தவறியதால், நம்பகத்தன்மை அற்ற ஒரு சூழல் உருவாகியுள்ளதாக Bachelet தெரிவித்தார்.
தண்டனை விதிக்கப்பாடமலே விடப்படும் ஒரு நிலை, இனக்கலவரங்களுக்கும் நிலையற்ற தன்மைக்கும் வழி வகை செய்யும் என்று கூறிய Bachelet, இந்த வழக்குகளை தீர்ப்பது மற்றும் கடந்த கால குற்றங்களில் ஈடுபட்டோரை நீதிக்குமுன் கொண்டு வருவது, பாதிக்கப்பட்டோரின் நம்பிக்கையை மீட்பதற்கு அவசியம் என்றார்.
2009 முரண்பாட்டின்போது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதி அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதில் முன்னேற்றம் காணப்படவில்லை என்றார் அவர். கடந்த ஆண்டு அரசியல் பிரச்சினைகள் சில ஏற்பட்டதும் இந்த காலதாமதத்திற்கு ஒரு காரணம் என்றார் அவர்.
ஏற்கனவே, 18 மாதங்களுக்குள் முறையான விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என, 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தீர்மானம் ஒன்று அறிவுறுத்தியிருந்தது.
அதற்கு கொடுத்த இரண்டாண்டு கால நீட்டிப்பும் இந்த மாதத்துடன் முடிவடையும் நிலையில், இதுவரை தெளிவான முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்