இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம்; மத்திய அமைச்சர் கூறிய கருத்து!


இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கடற்பாலம் அமைப்பது சிறிலங்கா அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பாலம் அமையுமாயின் இரு நாட்டின் ஒற்றுமையும் வலுப்பெறும் என ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
லண்டனைத் தலைமையகமாக கொண்டியங்கும் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பாலம் அமைக்கப்படுமா? என ராதாகிருஷ்ணனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக பாரதி பாடிய விஷயம் 'சிங்களத் தீவிற்க்கு பாலம் அமைப்போம்' அதனை மக்களும் விரும்புகின்றனர். அந்த நாட்டு அரசாங்கமும் நினைத்தால் நிச்சயம் நடக்கும். இந்த விஷயத்தில் இரண்டு கையும் சேர்ந்தால்தான் ஓசை வரும். ஆனால், கடல் பாலம் அமைக்கப்பட்டால் இந்திய இலங்கை ஒற்றுமை மிகவும் வலுவடையும்.” என தெரிவித்தார்.
இதேவேளை, கச்சதீவு குறித்த மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பாகவும் பொன் ராதாகிருஷ்ணனிடம் கேட்கப்பட்டது.
குறிப்பாக, 2013 ஆம் ஆண்டு பா.ஜ.கவால் நடத்தப்பட்ட கடல் தாமரை மாநாட்டில் வரும் ஐந்து ஆண்டிற்குள் கச்சத்தீவை மீட்டு எடுப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து கடந்த ஐந்து ஆண்டில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், ”தமிழக மீனவர்களுக்கு தொல்லை கொடுத்தால், இலங்கையில் வசிக்கும் தமிழ் மீனவர்களுக்கு தொல்லை கொடுத்தால் நாங்கள் அதை திரும்பப் பெற வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்போம் என்று கூறினோம். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் படுகொலைகள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.
அங்கு இருக்கக் கூடிய மக்கள் தங்கள் தொழில்களை செய்யக் கூடிய சூழ்நிலை அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆழ்கடலில் மீன் பிடிப்பிற்காக 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் வகுக்கப்பட்டு அதற்கான படகுகள் கட்டப்பட்டு வருகிறது. இதனால் ஒரு ஆண்டிற்குள் நிரந்தர தீர்வு கிடைக்கும்.” என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்