உலகில் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடு எது தெரியுமா? ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை


உலகில் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடுகளில் பின்லாந்து இந்தாண்டும் முதலிடத்தை தக்க வைத்துள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.
ஒரு நாட்டின் வாழ்க்கைச் சூழல், சமூக ஒருங்கிணைப்பு, சராசரி வாழ்நாள் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மகிழ்ச்சியான நாடு எது என்பதை ஐ.நா. கணக்கிட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு 2019-இலும் உலகளவில் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக பின்லாந்து இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் தற்கொலை சம்பவங்கள் அதிகளவில் நிகழ்வதில் ஹங்கேரிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் பின்லாந்து உள்ளதாக 1990-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. இருந்தபோதிலும், மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் அந்த நாடு முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது அனவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பின்லாந்திற்கு பாதகமான அம்சங்களாக தற்கொலை விகிதம், கடுமையான நீண்ட குளிர் மற்றும் காலநிலை போன்றவைகள் இருந்தாலும், உலகின் எந்த மூலையில் திடீரென மனச்சோர்வு ஏற்பட்டால் தற்கொலை அபாயம் எல்லோருக்கும் பொதுவானது என்பதால் பின்லாந்தை மட்டும் குறைகூறக்கூடாது என அந்த நாட்டின் தேசிய சுகாதார மையத்தின் பேராசிரியர் டிமோ பர்டோனன் கூறியுள்ளார்.
கடந்த 1990-ஆம் ஆண்டுடன் கணக்கிடும் போது தற்போது பின்லாந்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை பாதிக்கும் கீழாக குறைந்துள்ளதாகவும், பின்லாந்தில் குறிப்பாக, ஆண்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளவும் அவற்றை சமூகம் ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவமும் தற்போது மிகவும் அதிகரிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று பர்டோனன் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரத்தின்படி, சர்வதேச அளவில் அதிக தற்கொலை விகிதம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பின்லாந்து 22-ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்