பாதுகாப்பு உறவுகளால் மாறும் நிலைப்பாடுகள்


இலங்கையில் நிரந்தரமான தளத்தை அமைப்பதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாக வெளியான செய்திகளை நிராகரித்து, அமெரிக்க தூதரகப் பேச்சாளர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னதாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
எந்த நேரத்திலும் அமெரிக்க கடற்படை கப்பல்கள் இங்கு வரக் கூடியளவுக்கு இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறோம் என்றும், அதனால் இங்கு நிரந்தர தளத்தை அமைக்க வேண்டிய தேவை இல்லை என்றும் அமெரிக்க தூதரகப் பேச்சாளர் கூறியிருந்தார்.
அந்த அதிகாரியின் கருத்து இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருங்கிய உறவுகளை படம் பிடித்துக் காட்டுவதாக இருந்தது.
வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு முன் அனுமதி பெறும் நடைமுறை ஒன்று உள்ளது. ஆனாலும் எந்த நேரத்திலும் அமெரிக்க போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வரக்கூடிய நிலை இருக்கிறது என்பது இரு தரப்பு பாதுகாப்பு உறவுகள் உச்சத்தில் இருப்பதைக் காட்டுவதாக உள்ளது.
கடந்த மாதம் 27ஆம் திகதி அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் ஆயுதப்படைகள் குழுவில் “இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ செயற்பாடுகள்” என்ற தலைப்பில் நடந்த அமர்வில் உரையாற்றிய அமெரிக்காவின் இந்தோ - பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதி அட்மிரல் பிலிப் டேவிட்சன் இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்திக் கொள்ளப்போவதாக வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
“இந்தியப் பெருங்கடலில் இலங்கை குறிப்பிடத்தக்க மூலோபாய வாய்ப்பாக உள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் இராணுவ - இராணுவ உறவுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
அரசியல் குழப்பம் மற்றும் சிங்கள, தமிழ் இனங்களுக்கிடையிலான பதற்ற நிலை என்பன உறுதியற்ற தன்மை மற்றும் தடைகளை ஏற்படுத்தினாலும் தொடர்ந்தும் எமது ஒத்துழைப்பு வளர்ந்துள்ளது.
அமெரிக்கா - இலங்கை கடற்படைகளுக்கிடையிலான ஈடுபாடுகளை அதிகரிப்பதில் 2019இல் இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடம் கவனம் செலுத்தவுள்ளது” என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த அமர்வில் அமெரிக்காவின் உதவி பாதுபாப்புச் செயலாளர் ரண்டாரில் சூரிவர் உரையாற்றிய போது “தெற்காசியாவில் இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், மாலைதீவு ஆகிய நாடுகளுடன் அமெரிக்காவின் கூட்டுகள் வளர்ந்து வருகின்றன” என்று குறிப்பிட்டிருந்தார்.
இவையெல்லாம் இலங்கையை நோக்கி பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பான வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளதற்கான அடையாளங்களாகும். இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவமும், இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் வலுவடைந்து வருவதும் இலங்கை மீதான மேற்குலக கரிசனைகள் அதிகரித்துள்ளமைக்கு முக்கியமான காரணிகளாகும்.
பூகோள அரசியல் போட்டியின் மையமாக இலங்கைத் தீவு மாறத் தொடங்கியிருக்கின்ற சூழலில் மேற்குலக நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான உறவுகள் பலமடைந்து வருவது ஆச்சரிப்படக்கூடிய விடயமல்ல.
இத்தகைய பாதுகாப்பு உறவு பலம் பெறுகின்ற நிலையில் இலங்கையுடன் கடந்த காலங்களில் மேற்குலகம் கடைப்பிடத்து வந்த பல இறுக்கமான போக்குகள் தளரத் தொங்கியிருக்கின்றன.
Indo - Pacific Endeavour 2019 கூட்டுப் பயிற்சியின் ஒரு கட்டமாக அவுஸ்திரேலிய கடற்படையின் HMAS 'Success' மற்றும் HMAS 'Parramatta' ஆகிய போர்க்கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்துக்கும், ஹெலிகொப்டர் தாங்கி கப்பலான HMAS Newcastle என்ற போர்க்கப்பல் ஆகியன கடந்த மாதம் 23ஆம் திகதி கொழும்புத்துறை முகத்துக்கும் வந்திருந்தன.
இலங்கை கடற்படையுடனான கூட்டுப் பயிற்சிகள் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 29ஆம் திகதி கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய பதில் தூதுவர் ஜோன் பிலிப் HMAS Canberraவுக்குச் சென்றிருந்தார். செய்தியாளர்களும் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அங்கு உள்நாட்டு போரின்போது மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கைப் படையினருடன் இணைந்து செயற்படுவதற்கு அவுஸ்திரேலிய ஆயுதப்படைகளுக்கு எந்த தயக்கமும் இல்லை என்று அவுஸ்திரேலிய பதில் தூதுவர் ஜோன் பிலிப் கூறினார்.
இறுதி கட்டப்போரில் 59ஆவது டிவிசனுக்கு தலைமை தாங்கிய இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அவுஸ்திரேலியா செல்வதற்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவர் போர்க்குற்றச்சாட்டுகளில் சிக்கியவர் என்ற அடிப்படையில் அவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அவுஸ்திரேலியாவின் இந்த மறுப்பு பற்றிய செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் இப்போது அதே அவுஸ்திரேலியா மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கைப் படையினருடன் இணைந்து செயற்படுவதற்கு அவுஸ்திரேலிய ஆயுதப்படைகளுக்கு எந்த தயக்கமும் கிடையாது என்று கூறியிருப்பது மாற்றத்தை காண்பிக்கின்றது.
“இலங்கைப் படையினர் மீது மோசமான குற்றச்சாட்டுகள் உள்ளன என்பது எங்களுக்கு தெரியும், அவர்கள் அதனை தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள் என்று நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம். குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
ஆனால் நாங்கள் இலங்கை ஆயுதப் படைகளுடன் இணைந்து செயற்பட விரும்புகிறோம். போர் முடிந்து 10 ஆண்டுகளாகி விட்டன. நாங்கள் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டியுள்ளது” என்றும் அவுஸ்திரேலிய பதில் தூதுவர் கூறியிருந்தார்.
அவுஸ்திரேலிய பதில் தூதுவரின் இந்தக் கருத்துக்களில் பல விடயங்களை எடுத்துக் கொள்ளலாம். போர்க்குற்றச்சாட்டுகள் தீவிரமானவை, அதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் அவுஸ்திரேலியா உறுதியாக இருக்கிறது என்பது அதில் ஒன்று.
ஆனால் அதற்கு அப்பால் போர்க்குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இலங்கைப் படையினருடன் இணைந்து செயற்பட எமக்கு தயக்கம் இல்லை என்பது இன்னொரு முக்கியமான செய்தி.
போர் முடிந்து 10 ஆண்டுகளாகி விட்டன. இனிமேலும் அதையே தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்க முடியாது என்ற தொனியும் அவுஸ்திரேலிய பதில் தூதுவரின் கருத்தில் பிரதிபலிக்கிறது.
கடந்த காலத்தை விட எதிர்காலமே தமக்கு முக்கியம் என்பதையும் அவுஸ்திரேலியா வெளிப்படுத்தியிருக்கிறது.
காலம் கடந்து போகின்றபோது படையினர் மீதான குற்றச்சாட்டுகள் வலுவிழந்து போகும், அதில் சர்வதேச சமூகம் அக்கறையிழந்து விடும் என்பதை அவுஸ்திரேலிய பதில் தூதுவரின் கருத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
போர்க்குற்றச்சாட்டுகள் ஒரு புறத்தில் இருக்கட்டும் அதற்காக இலங்கைப் படைகளின் மூலம் அடையக்கூடிய தமது மூலோபாய நலன்களை விட்டுக் கொடுப்பதற்கோ, இழப்பதற்கோ அவுஸ்திரேலியா தயாராக இல்லை என்பதை அவுஸ்திரேலிய பதில் தூதுவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளும் இதே நிலைப்பாட்டில் தான் இப்போது இருக்கின்றன.
2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இலங்கை அரசுடனும், படைகளுடனும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ள அமெரிக்க, ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கு நாடுகள், மனித உரிமை விடயங்களை தமது பாதுகாப்பு உறவுகளுக்கு தடையை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றன.
இது மேற்குலக நலன்களுக்கு சாதகமானதாக இருந்தாலும் இலங்கை தீவில் நீதியை எதிர்பார்த்திருக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கின்றதாக இருக்கிறது.
மனித உரிமைகள் என்ற ஆயுதத்தை வைத்து இலங்கை அரசாங்கத்திற்கு கடிவாளம் போட்ட மேற்குலகம் அதே மனித உரிமைக் கரிசனைகளைப் புறம்தள்ளி வைத்து விட்டு இலங்கையுடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ள முனைந்திருக்கிறது.
இங்குள்ள பிரதான பிரச்சினை என்னவென்றால் மனித உரிமை பிரச்சினைகளால் பாதுகாப்பு உறவுகளை வைத்துக் கொள்வதற்கு தயக்கமில்லை என்று கூறுகின்ற நிலை ஏற்பட்டிருப்பது தான்.
அவுஸ்திரேலியாவின் கூட்டுப் பயிற்சியை வரவேற்றிருக்கின்ற கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட இராணுவத்தின் மீது போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்ற நிலையில் இந்தக் கூட்டுப்பயிற்சிகள் நடந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று எனக் கூறியிருக்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் சற்று குறைத்துக் கொண்டிருந்தாலும், அவுஸ்திரேலியா அப்படி ஒதுங்கியிருந்த நாடு அல்ல.
அதனை அட்மிரல் வசந்த கரன்னாகொடவும் நினைவுப்படுத்தியிருக்கிறார். போருக்குப் பின்னர் இலங்கையில் இருந்து படகுகளில் அவுஸ்திரேலியாவுக்குப் படையெடுத்த பெருமளவு அகதிகளை கடலில் வழிமறித்து தடுப்பதற்கு இலங்கைக் கடற்படையின் உதவியை பெற்றிருந்தது அவுஸ்திரேலியா.
தனது நாட்டுக்குள் தமிழ் அகதிகள் வருவதை தடுப்பதற்காக இலங்கை கடற்படையுடன் கூட்டாக இணைந்து அவுஸ்திரேலியா செயற்பட்ட போது, போர் முடிந்து ஓரிரண்டு ஆண்டுகள் தான் ஆகியிருந்தன.
எனவே போர் முடிந்து 10 ஆண்டுகளாகி விட்டன என்று அவுஸ்திரேலியா அலட்சியம் செய்ய முயன்றுள்ளதை ஆச்சரியமாக பார்க்க வேண்டியதில்லை. பூகோள அரசியல் நலன், பிராந்திய பாதுகாப்பு நலன் போன்ற விடயங்களுக்கு மத்தியில், இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு மூன்றாம் பட்ச விவகாரமாகி விட்டது.
எனவே வரும் காலத்தில் பாதுகாப்பு உறவுகளால் இலங்கையின் மீதான மனித உரிமை பிரச்சினைகள் மறக்கப்படவோ, மறைக்கப்படவோ வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்