கனடா குறித்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்?


பூமி வெப்பம் அதிகரித்துச் செல்வது தற்போது மிக அபாயமான பிரச்சினையாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடா இரண்டு மடங்கு வேகமாக வெப்படைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பிலான திணைக்களம் அண்மையில் மேற்கொண்டு வெளியிட்டுள்ள ஆய்வு அறிவியல் அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒட்டாவாவில் வைத்து இதனை வெளியிட்டு கருத்துரைத்துள்ள அறிவியலாளர்கள், எவ்வளவு வேகமாக நமது நாடு வெப்பமாகி வருகிறது என்பதனையும், அதன் விபரீதத்தினையும் விளக்கியுள்ளனர்.
கனடா முழுவதும் இந்த வெப்பமயமாதலின் தாக்கத்தினை நாங்கள் ஏற்கனவே உணரத் தொடங்கி விட்டதாகவும், இந்த பருவநிலை மாற்றத்துக்கு ஈடுகொடுக்க வேண்டியது இன்றியமையாததாகி விட்டதாகவும், எனினும் வெப்ப அதிகரிப்புக்கு காரணமான வாயு வெளியேற்றத்தினை குறைக்க வேண்டிய அவசர நடவடிக்கை தேவையாக உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 70ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விடவும, கனடாவின் சராசரி வெப்பநிலை தற்போது 1.7 பாகை செல்சியசால் அதிகரித்துள்ளதாகவும், ஆனால் உலக அளவிலான சராசரி வெப்பநிலை 0.8 பாகையால் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் விபரம் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக கனடாவின் ஆட்டிக் வட்டாரம், 2.3 பாகை செல்சியஸ் அதிகரிப்பினை கண்டு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பனிகாலத்தில் வெப்ப அதிகரிப்பு கூடுதலாக காணப்படுவதாகவும், டிசம்பருக்கும் பெப்ரவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் 3.3 பாகை வெப்ப அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கனடாவின் தென் பிராந்தியங்களில் கூடிய அளவு குளிர்கால மழை ஏற்படும் என்றும், அதிக மழை மற்றும் குறைவான பனி என்பன, குறிப்பாக கோடை காலத்தில் நாட்டில் நன்நீர் அளவினை குறைத்துவிடும் ஆபத்து உள்ளதாகவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்