எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தவர் தோனி” - கோலி உருக்கம்


தோனியை சிலர் விமர்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
உலகக் கோப்பைக்காக 15 பேர் கொண்ட கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா, ஷிகர் தவான், தோனி உள்ளிட்ட மூத்த வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், விஜய் சங்கர் உள்ளிட்ட புதிய வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். உலகக் கோப்பை அணி குறித்து விமர்சனங்களும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விராட் கோலி இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். தோனி அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். “தோனி போட்டியின் தன்மையை ஆடுகளத்தின் உள்ளேயும், வெளியேயும் கணிக்கக் கூடியவர். முதல் பந்தில் இருந்து 300வது பந்து வரை என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ளக் கூடியவர். ஸ்டம்பிற்கு பின்னால் தோனி இருப்பது என்னுடைய அதிருஷ்டம். அவரை பலரும் விமர்சனம் செய்வது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒவ்வொரு போட்டி முடிந்ததும் தோனி மற்றும் ரோகித் சர்மாவுடன் ஆலோசனை நடத்த விரும்புவேன்.

டெத் ஓவர்களில் எல்லைக் கோட்டியில் இருந்து பீல்டிங் செய்ய விரும்புவேன். அதன் மூலம் அணிக்கு சிறப்பான பங்களிப்பை செலுத்த முடியும் என்று நம்புகிறேன். அந்த நேரத்தில் யாரேனும் ஒருவர் என்னுடைய பொறுப்பை மேற்கொள்ள வேண்டும். 30-35 ஓவர்களுக்கு பின்னர் நான் எல்லைக் கோட்டுக்கு அருகில் பீல்டிங் செய்ய சென்றுவிடுவேன் என்று அவருக்கு தெரியும். பின்னர் என்ன நடக்கும் என்பது எங்கள் இருவருக்கும் தெரியும். இருவருக்கும் இடையில் அதிக அளவில் நம்பிக்கையும், மரியாதையும் உள்ளது.

எனக்கு ஆரம்ப கட்டத்தில் அவரிடம் நிறைய ஆதரவு இருந்தது. நான் அணிக்கு நுழைந்த தருணத்தில் சில போட்டிகளுக்கு பிறகு வேறு சிலரை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. எனக்கான வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்தி கொண்டேன். இருந்தாலும், எனக்கு கொஞ்சம் ஆதரவு தேவைப்பட்டது. அது எனக்கு மிக முக்கியமானதாக இருந்தது. மூன்றாவது இடத்தில் விளையாட எனக்கு வாய்ப்பளித்தவர் தோனி. ஏனெனில் நிறைய இளைஞர்களுக்கு அந்த இடத்தில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை” என்று விராட் கோலி கூறினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்