நெருப்பைக் குப்பையால் அணைக்க முடியுமா? நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி

தேர்தல் முடிந்து இரண்டு நாள்கள் முடிந்துவிட்டது. எல்லாக் கட்சிகளின் தொண்டர்களும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனர். நாம் தமிழர் பிள்ளைகள் மட்டும் பெருமகிழ்ச்சியோடு தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். திராவிடக் கட்சிகளின் தொண்டர்கள் அவரவர் தொகுதியின் வேட்பாளர் வெல்லவாரா? என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றனர். நாம் தமிழர் பிள்ளைகளோ 'விவசாயி' சின்னத்தை தக்க வைத்துவிட்டால் போதும் என்று நினைக்க தொடங்கியுள்ளனர்.
4 கோடிக்கும் மேலான வாக்குகள் பதிவாகியுள்ளது. தோராயமாக 35 இலட்சம் வாக்குகள் சின்னத்தை தக்க வைக்கத் தேவைப்படுகிறது. கடந்த இரண்டு நாள்களாக வந்துகொண்டு இருக்கும் தகவல்கள் கட்டாயம் நாம் தமிழர் கட்சி அதன் இலக்கை அடையும் என்றே தெரிகிறது. இலக்கை அடையாமல் போனாலும் சோர்ந்து போகின்ற கூட்டம் அல்ல இது. அதனைத் தொடர்ந்தும் புலிகள் பாயும்.
இத்தகைய சூழலில் இந்த வார குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை, நாம் தமிழர் கட்சியினர் மிகவும் கவனிக்க வேண்டிய தகவல்களை கொண்டுள்ளது என எண்ணுகிறேன். 'காட்சி, அச்சு ஊடகங்கள் நாம் தமிழரைக் காட்ட மறுத்த போதும், களத்தில் நாம் தமிழர் கட்சியினரின் பரப்புரை வலிமையாக இருந்ததாக..' அந்த இதழில் சுட்டிக்காட்டி உள்ளனர்.
நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் பலருக்கும் தெரியும், கடந்த சட்டமன்ற தேர்தலைக் காட்டிலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பொருளாதார நெருக்கடி கடுமையாக இருந்தது. தேர்தலில் களமாடிக் கொண்டு இருந்த பலரும் சோர்வாகத்தான் இருந்தனர். நாம் தமிழரின் பலத்தில் வெறும் 10% மட்டுமே களத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த 10% உழைப்பிற்கே 'பரப்புரையில் கலக்கிவிட்டனர் நாம் தமிழர் கட்சியினர்' என்கிறது இந்த இதழ். நம்மைத் தவிர வேறு யாரும் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கை கொடுத்து வாக்கு கேட்கவில்லை என்பது உணமைதான் என்றாலும் நமது முழுமையான ஆற்றலைப் பயன்படுத்தினால் இன்னும் எவ்வளவு பெரியத் தாக்கதை ஏற்படுத்தலாம் என்று நாம் யோசிக்க வேண்டும்.
'படித்தவர்கள் பொதுவாக தமிழ், தமிழர் என்று பேசுவதை விரும்புவதில்லை. ஆனாலும் இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு படித்தவர்களின் ஆதரவு பலமாக இருந்தது' என்றும் எழுதியுள்ளனர். படித்தவர்கள் பலரும் அண்ணன் சீமான் பேசிய காணொளிகளைப் பார்த்துதான் நாம் தமிழருக்கு வாக்களிக்க வேண்டுமென்பதற்காக வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பயணப்பட்டு வந்துள்ளனர். உண்மையில் அவர்கள் அத்தனை பேருக்கும் தமிழின உணர்வு மெல்ல மெல்ல அண்ணன் சீமானால் ஊட்டப்படுவிட்டது என்பதைத்தான் இந்த தேர்தல் நிரூபித்து இருக்கிறது. தமிழினம் மீள் எழுச்சிக் கொள்வதை பட்டவர்தனமாக அவர்களால் ஏற்க முடியாது என்பதால்தான் அவர்கள் இப்படி எழுதியுள்ளனர்.
ஐடி, வங்கி பணியாளர்கள் தங்களின் சொந்த பணத்தை செலவு செய்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரித்தது, பிரதான கட்சிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாகவும் இதழில் தெரிவித்து உள்ளனர். ஊடகங்களுக்கு இது முன்னரே தெரிந்து இருந்தும், ஏன் இதுவரை நாம் தமிழர் கட்சியை நேர்மறையாக மக்களிடம் கொண்டு செல்ல முன்வரவில்லை? இப்பொழுது மட்டும் சொந்த பணத்தைச் செலவு செய்து நாம் தமிழர் கட்சியை ஒவ்வொரு உணர்வாளர்களும் காட்டுகின்றனர் என்று எழுதுவது எதனால்?
காரணம் களத்தில், இவர்கள் எழுதியுள்ளதைவிட பாரிய தாக்கத்தை நாம் தமிழர் கட்சி ஏற்படுத்தி இருக்கிறது என்பதால்தான். குறிப்பாக திமுக, அதிமுக கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தில் உள்ள படித்த இளைஞர்கள் 'விவசாயி' சின்னத்திற்கு வாக்களிக்கச் சொல்லி தங்களது பெற்றோர்களிடம் சண்ணையிட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இதுதான் பிரதான கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் திராவிடக் கட்சிகளை அசைத்துப் பார்த்து இருக்கிறது.
திராவிடக் கட்சிகளின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நடுநிலை வாக்காளர்களை அதிருப்தி அடைய வைத்ததாலும், தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை வழங்கியும், மண் சார்ந்த அரசியலைப் பேசுவதாலும் நாம் தமிழருக்கு ஆதரவு பெருகி வருவதாக ரிப்போர்ட்டர் இதழ் தெரிவித்துள்ளது. மண் சார்ந்த அரசியல் என்று பொத்தாம் பொதுவாக எழுதுவது என்பது இதுவரை நாம் பேசிய வளச்சுரண்டலுக்கு எதிரான கருத்துகளின் வீரியத்தை குறைக்க முற்படுவதாக இருந்தாலும் இனியும் நாம் பேசுகின்ற அரசியலை இவர்களால் தடுக்கவே முடியாது என்பதைத்தான் இந்த வரிகள் சுட்டிக்காட்டுகின்றன.
நாம் தமிழர் கட்சியைப் பற்றி எழுதும் போது மட்டும் கட்சியின் உண்மைத்தன்மையை அப்படியே எழுத எந்த ஊடகங்களும் தயாராக இல்லை. அண்ணன் சீமான் பேசுகின்ற அனைத்து அரசியலையும் இவர்களால் எழுத முடியுமா? ஸ்டாலின், ஈபிஎஸ், டிடிவி, கமல் பேசுவதெல்லாம் அரசியலே கிடையாது. அவர்கள் பேசுவது வெறும் புறணி. அதனையே எழுதி எழுதி பழகிய கைக்களுக்கு மண், மழை, மரம், அருவி, ஆறு, மண்புழு, தேனி என்று பேசுகின்ற அரசியலை எழுதக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.
தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே இந்த திராவிட ஊடகங்கள் கதறுகின்றன என்றால் முடிவுகள் வந்தபின்பு இவர்கள் எப்படி எல்லாம் பூசி மொலுகுவார்களோ என்று தெரியவில்லை. 'நாம் தமிழர் கட்சியின் மீது குற்றச்சாட்டுகள் வந்தாலும் ஊடகங்களில் காட்டாதீர்கள்' என்று பாஜக தலைவர்கள் தமிழக ஊடகவியலாளர்களிடம் பேசியதாக தேர்தலுக்கு முன்பே தகவல் வந்தது. அதனால்தான் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியலைக் கூட காட்ட மறுத்தன இந்த ஊடகங்கள். தேர்தல் முடிவுகள் வரும்போதும் இதே நிலைதான் நீடிக்கும் என்றாலும் இந்த இருட்டிப்புகள் ஒருபோதும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை பாதிக்காது என்பதை நாம் உணர்ந்தே பயணிக்கிறோம்.
இனி இவர்கள் நம்மைப் பற்றிப் பேசியேத் தீருவார்கள்..
நம்மைப் பற்றி எழுதியே தீருவார்கள்..
நம்மைக் காட்டாமல் இனி காட்சி ஊடகங்களால் பிழைக்க முடியாது என்ற காலமும் உருவாகத்தான் போகிறது...
ஏனெனில்..
நெருப்பைக் குப்பையால் அணைக்க முடியுமா?
-பேராசிரியர் ஆ.அருளினியன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்