அடுத்து நம்ம ஆட்சிதான்.. திடீர் உற்சாகத்தில் திமுக!


அடுத்து நமது ஆட்சிதான் என்று உற்சாகத்தில் திளைத்து உள்ளனர் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என்கிறது தமிழ்நாடு கள நிலவரம். இதற்கெல்லாம் காரணம், நடைபெற உள்ள மினி சட்டசபை தேர்தல் என்று அழைக்கப்படக்கூடிய 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பற்றிய எதிர்பார்ப்பு தான். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டது, முதலே எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழும் என்று திமுக தலைவர்கள் கூறிவந்தனர். ஆனால், இப்போது உறுதியாக நம்பத் தொடங்கி உள்ளனர்.

மினி சட்டசபை தேர்தல் காலியாக உள்ள தமிழக 18 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 என, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இரு தினங்களுக்கு முன்பாக மேலும் நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது தலைமை தேர்தல் ஆணையம். இதன் மூலம் மொத்தம் 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.


சர்வேக்கள் கூறுவது இதனிடையே 18 சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார், என்று ஜூனியர் விகடன் இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில், 17 தொகுதிகளில் திமுக வெல்லும், என்றும் ஒரு தொகுதி மட்டுமே அதிமுக வசம் செல்லும் என்றும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், கூடுதலாக 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த டிரெண்டில் எந்த மாற்றமும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

உள்குத்துகள் அதிமுகவுக்கு தற்போது சபாநாயகரையும் சேர்த்து 114 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. அதில் இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். கருணாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் நட்பு பாராட்டுகிறார். தனியரசு மட்டுமே தற்போது அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இதைத்தவிர அதிமுக எம்எல்ஏக்களாக இருந்தாலும் கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாச்சலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் தான் நட்பு பாராட்டி வருகிறார்கள்.


10 தொகுதியாவது வேண்டும் மேலோட்டமாக பார்த்தால் அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்கள், அதாவது இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதுமானது போல தெரியும். ஆனால் ஸ்லீப்பர் செல்கள், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தற்போது வேறு கட்சிக்கு ஆதரவளிப்பது போன்றவர்களையெல்லாம் கழித்துவிட்டுப் பார்த்தால், குறைந்தது 9 அல்லது 10 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றால் தான் ஆட்சி நிலைக்கும். ஆனால் பல்வேறு கருத்துக் கணிப்புகளும் அதிமுக 4 தொகுதிகளுக்கு, கீழேதான் வெற்றி பெறக் கூடும் என்று கூறுகின்றன.


சட்டசபை முக்கியம் மே 23 ஆம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகளுடன் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. எனவே எப்படியும் அதிமுக அரசுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்ற எண்ணத்தில் திமுக வட்டாரம் இப்போதே குஷியாக உள்ளது. அடுத்ததாக பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டும், ஸ்டாலினை ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும் என்று நிர்வாகிகள் மகிழ்ச்சியோடு பேசி வருவதை கவனிக்க முடிகிறது. ஆனால் எப்படியாவது குறைந்தபட்சம் 10 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற முனைப்பு அதிமுக பக்கம் உள்ளது. எனவே லோக்சபா தேர்தலை விடவும், சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தான் ஒரு குருஷேத்திரம் போல காட்சியளிக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்