குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்? வெளியான தகவல்


இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த குண்டுவெடிப்பில் சீனாவை சேர்ந்த 4 விஞ்ஞானிகள் உயிரிழந்ததாக தெரியவந்த நிலையில் அவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து தகவலை கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளதாக Nature பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் 8 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் கொழும்பில் உள்ள கிங்ஸ்பெரி ஹொட்டலும் அடக்கமாகும். இந்த ஹொட்டலில் சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் தங்கியிருந்த நிலையில் அதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியப் பெருங்கடல் வானிலை ஆய்வு தொடர்பான கூட்டு திட்டத்தில் பங்கேற்கவே அவர்கள் இலங்கை வந்திருந்தனர்.

தெற்கு சீனாவில் உள்ள Sea Institute of Oceanology-ஐ சேர்ந்த லி ஜியன், பன் வின்லியங் மற்றும் துணை ஆராய்ச்சியாளர் லீ தவி, முனைவர் மாணவர் வங் லிவி ஆகியோர் தான் குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர்.

இதோடு சீனாவை சேர்ந்த ஐந்து ஆராய்ச்சியாளர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்.

இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆராய்ச்சி ஒத்துழைப்பை ஊக்குவிப்போம் என்பதை உறுதியளிக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்