நாடாளுமன்ற தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் ஏற்படும் என தகவல்: காரணம் என்ன தெரியுமா?


மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 17வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் திகதி முதல் மே 19-ம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.

இந்த தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 67.11 சதவிகிதம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

அவற்றில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள 542 மக்களவைத் தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைப் பிரித்து வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதாவது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

இதனால் தான் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்