அதிரடி காட்டிய ரோஹித், மலிங்கா... மும்பை மிரட்டல் வெற்றி: வெளியேறிய கொல்கத்தா!ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றிபெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதி மற்றும் 56-வது லீக் போட்டி நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தெரிவு செய்தது. இதன்படி கொல்கத்தா அணியின் சார்பில் சுப்மன் கில், கிரிஸ் லின் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

அதில் சுப்மன் கில் 9(16) ஓட்டங்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து அதிரடி காட்டி வந்த கிரிஸ் லின் 41(29) ஓட்டங்களில் கேட்ச் ஆனார்.

அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் 3(9) ஓட்டங்களிலும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆந்த்ரே ரஸ்செல் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து மலிங்கா பந்து வீச்சில் வெளியேறினர்.

அடுத்து ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா ஓரளவு ரன் சேர்த்தனர். அதில் நிதிஷ் ராணா 26(13) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் ராபின் உத்தப்பா 40(47) ஓட்டங்களிலும், ரிங்கு சிங் 4(6) ஓட்டங்களிலும் வெளியேறினர்.

முடிவில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்கள் எடுத்தது.

மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக மலிங்கா 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன் மூலம் மும்பை அணிக்கு 134 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 134 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் சார்பில் குவிண்டன் டி காக், அணித்தலைவர் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

சிறந்த துவக்கத்தை தந்த இந்த ஜோடியில், டி காக் 30(23) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக ரோகித் சர்மாவுடன், சூர்ய குமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் மும்பை அணி வெற்றி நோக்கி முன்னேறியது. அந்த ஜோடியில் ரோகித் சர்மா தனது அரை சதத்தினை பதிவு செய்தார்.

இறுதியில் ரோகித் சர்மா 55(48) ஓட்டங்களும், அதிரடியாக ஆடிய சூர்ய குமார் யாதவ் 46(27) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் மும்பை அணி 16.1 ஒவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 134 ஓட்டங்கள் எடுத்தது.

கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக கிருஷ்ணா ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்