சவூதியில் இஸ்லாமிய புனிதத் தலமான மக்கா நோக்கி ஏவுகணை தாக்குதல்!


சவூதியில்அமைந்துள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவை நோக்கி இரண்டு ஏவுகணைககளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், எனினும் அதனை இடையில் மறித்து சவூதி அரச படையினர் அழித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்காவில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தயிப் மற்றும் ஜெட்டா பகுதிகளின் அருகே இந்த ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவூதி அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை மக்காவை நோக்கி வந்த இரண்டு ஏவுகணைகளும் தகர்க்கப்பட்டாலும், மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் சவூதியில் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதுடன், பரபரப்பு நிலவி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குலக சார்பு ஏமன் அதிபர் தலைமையிலான அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிவரும் ஹவுத்திப் புரட்சியாளர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் சவூதி அரேபிய ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

எனினும் இதுவரை சவூதி அரசு இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. ஆனால் மக்கா மீதான தாக்குதலை நிராகரித்துள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், ஏமனில் சவூதி அரேபிய அரசு மேற்கொண்டுவரும் கொடூரங்களை நியாயப்படுத்தவே இவ்வாறான செய்திகளை பரப்பி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

உலகம் முழுவதும் பரந்துவாழும் முஸ்லிம்கள் ரமலாம் நோன்பை கடைப்பிடித்து வரும் காலப்பகுதியில் அவர்களது புனிதத் தலமான மக்கா மீது ஏவுகணை வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துவதுடன், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் மாத்திரமன்றி முஸ்லீம்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தும் என்பதாலேயே இந்த செய்தி பரப்பப்பட்டுள்ளதாகவும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்