இலங்கை குண்டுவெடிப்பு! உதவிக்கு இணைந்து கொண்ட இந்தியா.. எதற்காக தெரியுமா?


இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் இணைய இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் விரைவில் இலங்கைக்கு செல்கின்றனர்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் பண்டிகையின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் 253 பேர் உயிரிழந்ததோடு, 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.

இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தமிழகத்தில் தங்கி இருக்கலாம் என என்ஐஏ அதிகாரிகள் சந்தேகித்தனர். அவர்கள் தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவியது.

இதையடுத்து சென்னை, கோவை, ராமநாதபுரம், அதிராமபட்டினம், ராமேசுவரம், தஞ்சாவூர், கும்பகோணம், நெல்லை உட்பட தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

அப்போது கேரள மாநிலம் பாலக்காட்டில் ரியாஸ் அபுபக்கர், அபு துஜானா என்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குண்டு வெடிப்புகள் தொடர்பான விசாரணைகள், தகவல்கள் உள்ளிட்டவற்றைப் பகிர்ந்துகொள்ள இலங்கை அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கை அரசின் விசாரணைகளில் இணைந்து கொள்வதற்காக இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

வைசி மோடி என்ற அதிகாரி தலைமையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விரைவில் இலங்கை செல்ல உள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்