எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்! நீங்கள் அவதானித்தீர்களா?


லோக்சபா மற்றும் சட்டசபை இடைத் தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விடவும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர் என்ற தோற்றம் உருவாகி உள்ளது.

முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திடம் அந்த பதவியை பறிப்பதற்கு சசிகலா முயற்சி செய்த போது, திடீரென மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தர்மயுத்தம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம்.

இதன் பிறகு தினகரன் முதல்வர் பதவிக்கு வரலாம் என நினைத்து ஆர்.கே.நகரில் போட்டியிட முடிவு செய்ய, விழித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா கோஷ்டியினரை கைவிட்டு பன்னீர்செல்வம் அணியோடு பாசம் காட்டினார்.

இதன் பிறகு, ஓ பன்னீர்செல்வமே ஒப்புக்கொண்டது போல, பிரதமர் மோடியின் தலையீடு காரணமாக, எடப்பாடி அணியுடன், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இணைந்து கொண்டனர். துணை முதல்வரும் ஆனார் ஓ.பன்னீர்செல்வம்.

இருப்பினும் எடப்பாடி பழனிசாமி கையில் தான் அதிகப்படியான அதிகாரங்கள் குவிந்திருப்பதாக பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் குமுறல்களை வெளியிட்டது உண்டு.

கட்சி பதவிகள், முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் பதவிகள், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு, கிடைக்கவில்லை என்ற அதிருப்தி குரல்கள் அவ்வப்போது எழுந்தன. இருப்பினும் அதிமுக இரட்டை தலைமையின் கீழ் சுமுகமாக சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் நடைபெற்று முடிந்துள்ள லோக்சபா தேர்தல் முடிவுகளில் ஒரு உண்மை தெரியவருகிறது.

அது என்னவென்றால், எந்த ஒரு தொகுதியிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறாத நிலையில், அவரது மகன் ரவீந்திரநாத் நல்ல முன்னிலை பெற்றுள்ளார். அவர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. மாலை நிலவரப்படி, 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இது அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் போன்ற டிடிவி ஆதரவு அதிமுக முக்கிய புள்ளிகள் அதிகமாக இருந்தனர்.

டிடிவி தினகரன் பெரிதும் நம்பி இருந்தது அவர் சார்ந்த சமுதாய வாக்குகளை. பெரும்பாலும் அந்த சமுதாய வாக்குகள் அதிமுகவுக்கு அளிக்கப்பட்டு வந்தன.

பன்னீர்செல்வமும் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் பன்னீர்செல்வத்தின் ஆதரவு வட்டம் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக பன்னீர்செல்வத்திற்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பது தேனி லோக்சபா முடிவுகளில் இருந்து தெரிய வருகிறது.

அது மட்டுமல்ல எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டம் சேலம். அந்த சேலம் லோக்சபா தொகுதியில் 39 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வெற்றி கண்டுள்ளது, எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆனால் தனது சொந்த மாவட்டத்தில் தனது மகனை வெற்றி பெற வைப்பதில் பன்னீர்செல்வத்தின் மக்கள் செல்வாக்கு வெற்றி பெற்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இதே போல சட்டசபை இடைத் தேர்தல்களிலும் கூட பன்னீர்செல்வம் ஆதிக்கம் செலுத்தக்கூடிய தேனி மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுக முன்னிலை பெறுகிறது. பிற பகுதிகளில் தான் திமுக முன்னிலை பெற்றுள்ளது. மாலை நிலவரப்படி, அதிமுக 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

சாத்தூர், ஆண்டிப்பட்டி, சூலூர், நிலக்கோட்டை,மானாமதுரை, சோளிங்கர், ஒசூர், விளாத்திகுளம், சோளிங்கர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை வகித்தது.

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் எடப்பாடி பழனிச்சாமியை விட, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அதிகம் இருப்பது தெரிகிறது. இதை டெல்லியிலுள்ள முக்கிய புள்ளிகள் கவனிக்காமலில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்