தமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்!

இலங்கைத் தமிழர்களின் காலவரையறையற்றதொரு பாரம்பரியம் எனும் கண்காட்சியில், விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட ஈழத்தின் சிவில் நிர்வாகக் கட்டமைப்பு குறித்த காட்சி அரங்கை பார்த்த பிரித்தானியாவின் எதிர்க்கட்சி மற்றும் தொழிற்கட்சி ஆகியவற்றின் தலைவரான ஜெரமி கோர்பின், தனது வியப்பை வெளிப்படுத்தினார்.
அதேவேளை, முள்ளிவாய்க்காய்க்கால் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட ஒளிப்படங்களை பார்த்து ஜெரமி கோர்பின் கண்கலங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் பிரித்தானியாவில் நேற்று இடம்பெற்றது.
தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) ஏற்பாட்டில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை தமிழர்களின் காலவரையறையற்றதொரு பாரம்பரியம் எனும் கண்காட்சி பிரித்தானியாவில் நடைபெற்றது.
இரு நாட்கள் கொண்ட இம் மாபெரும் கண்காட்சியின் 2வதும் இறுதி நாளுமான நேற்று சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோர்பின் நேற்றைய நாளிற்குரிய கண்காட்சியினை மங்களவிளக்கேற்றி நாடாவினை வெட்டித் திறந்துவைத்தார்.
அதனைத்தொடர்ந்து வரவேற்பு பகுதியில் வகைப்பட்டிருந்த தமிழ் தகவல் நடுவத்தின் மறைந்த இயக்குநரும் இக்கண்காட்சிக்கான அடித்தளமிட்டவருமான வைரமுத்து வரதகுமாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூபி வணக்க அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர் கோர்பின் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டவைகளை பார்வையிட்டார்.
இந்நிலையில், குறித்த கண்காட்சியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த தமிழ் ஈழத்தின் சிவில் நிர்வாகப் பகுதிக்குள் (De facto State) நுழைந்த ஜெரமி கோர்பின் ஈழத்தின் சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்களை பார்த்து தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.
தமிழ் ஈழத்தில் அரசு ஒன்று இயங்கியிருப்பதை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் குறித்த காட்சி அமைப்புக்களை பார்வையிட்ட அவர் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் பேரவலத்தை காட்சிப்படுத்திய ஒளிப்படப்பகுதியினையும் பார்வையிட்டார்.
அங்கு சில ஒளிப்படங்களை பார்த்து கவலையடந்த கோர்ப்பின் முள்ளிவாய்க்கால் பேரவலம் குறித்து தனது கவலையை வெளியிட்டார்.
மேலும் கண்காட்சியில் இலங்கைத்தீவில் தமிழ் மொழியால் ஒன்றிணைந்துள்ள அனைத்து தரப்பினரின் வாழ்வியல் கலாசாரம் மற்றும் அரசியல் பண்பாடுகளை பிரதிபலிக்கும் படைப்புக்கள் இலக்கியங்கள் ஆராய்ச்சிகள் ஒளிப்படங்கள் ஆவணப்படங்கள் ஓவியங்கள் கார்ட்டூன்கள் மற்றும் கலைப்பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டது.
அத்துடன், சமூக செயல்முறை பட்டறைகள் விரிவுரைகள் தமிழர்களின் பாரம்பரிய கலைகள் சிறுவர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்களிக்கக்கூடிய அம்சங்கள் ஆகியன இக்கண்காட்சியை மேலும் மெருகூட்டியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்