இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடல்ல: சீ வி விக்னேஸ்வரன்


இலங்கை பௌத்த சிங்கள நாடா? என்பது தொடர்பில் கடந்த சில நாட்களாக பல கருத்துக்கள் நிலவி வருகின்றன அந்தவகையில் இது தொடர்பில் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரிடம் வினவப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

கேள்வி: இலங்கை பௌத்த சிங்கள நாடா? என்பது தொடர்பில் உங்கள் கருத்து என்ன ?

பதில்: இலங்கையானது அதன் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தம். தனி இனமோ, மதமோ அதனைச் சொந்தம் கொண்டாட முடியாது.

இது பல்லினம் வாழும், பல மதங்கள் நிலவும், பன் மொழிகள் பேசப்படும் நாடு. இலங்கை பௌத்த சிங்கள நாடு என்று கூறுவதன் காரணம் என்ன என்று நாம் பரிசீலிக்க வேண்டும்.

அதாவது இலங்கை பௌத்த சிங்கள நாடு,மற்றைய மத, இன, சமூக மக்கள் வந்தேறு குடிமக்கள். அவர்களுக்கு நாம் பார்த்துக்கொடுத்தால் தான் உரிமைகள் கிடைக்குமே ஒளியதாமாக அவர்கள் எதனையுங்கொண்டிருக்கவில்லை என்ற அடிப்படையிலேயே இவ்வாறு புத்தபிக்குகளாலும் மற்றையோராலும் சொல்லிவரப்படுகிறது.

இது உண்மையில் இலங்கையில் சிறுபான்மையினரை அடிமைப்படுத்த, பயப்படுத்த, அந்நியப்படுத்த எடுத்துவரப்படும் நடவடிக்கைகள்.

பிரச்சினைகள் ஏற்பட்டதே இவ்வாறான பேச்சுக்களாலும் சிந்தனையாலுமே.

கடந்த நூறு வருடங்களாக பெரும்பாலும் பௌத்த பிக்குகளும் மற்றும் சிங்கள பௌத்த புத்திஜீவிகள் சிலரும் சிங்கள மக்களிடையே மூளைச்சலவை செய்து இவ்வாறான தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

சில இஸ்லாமிய இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு பிற மத அப்பாவி மக்களின் உயிரைப் பறித்தால் தமக்கு சொர்க்கத்தில் 72 கன்னியருடன் வாழ இடம் கிடைக்க வைக்கும் என்ற கருத்தில் ஊறவைக்கப்பட்டார்களோ அதேபோல சிங்கள பௌத்தர்களும் மூளைச்சலவை செய்யப்பட்டு 1919க்குப் பின்னர் இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமே என்ற கருத்துக்கு அடிமையாக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் உண்மை அதுவல்ல. இந்நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் இந்துத் தமிழ் மக்களே. அவர்கள் புத்தபிரான் பிறக்க முதலே இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளார்கள்.

இந்து சமுத்திரத்தில் இடம் அமைந்திருந்து கடல் கொண்ட குமரிக் கண்டத்துடன் அவர்கள் பூர்வீகம் தொடர்புடையது. இலங்கையைப் பாதுகாக்கும் 5 ஈஸ்வரங்கள முன்னேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், தொண்டீஸ்வரம் ஆகியவற்றில் காணப்பட்ட சிவலிங்கங்கள் புத்தகாலத்திற்கு முன்பிருந்தே இங்கு எழுந்தருளி இருந்தவை.

இன்று தெவிநுவர அல்லது டொன்றா என்றுஅழைக்கப்படும் விஸ்ணு கோவில் தொண்டீஸ்வர சிவலிங்கத்தின் மேல் கட்டப்பட்ட கோவிலாகும்.

பௌத்தமானது இலங்கைக்குக் கொண்டுவந்த போது அம்மதத்தை முதன் முதலில் தழுவியவர்கள் தமிழரே. தேவநம்பியதீசன் ஒரு தமிழ் மன்னன். சில நூற்றாண்டு காலங்கள் இலங்கையின் வடகிழக்கைச் சேர்ந்த இந்துத் தமிழர்கள் பௌத்தர்களாக மாறி தமிழ் பௌத்தர்களாகவே வாழ்ந்தார்கள்.

அக்கால கட்டத்தில் வழக்கில் இருந்ததொல்லியல் பௌத்த எச்சங்களே இன்று வடமாகாணத்தில் அடையாளப் படுத்தப்படும் பௌத்த எச்சங்கள். இவை தமிழ் பௌத்தர் காலத்து பௌத்த எச்சங்களே.

சில வருடங்களுக்கு முன்னர் பேராசிரியர் சுனில் ஆரியரத்தின 'தெமளபௌத்தயோ'(தமிழ் பௌத்தர்கள்) என்ற நூலை சிங்கள மொழியில் வெளியிட்டிருந்தார். தமிழர்கள் பௌத்தர்களாக ஒரு காலத்தில் வாழ்ந்து வந்தமை பற்றி அந்நூலில் அவர் ஆராய்ந்துள்ளார். 'தெமளபௌத்தயோ'காலக்கிரமத்தில் பௌத்ததைக் கைவிட்டு இந்துசமயத்தை மீண்டும் தழுவினர்.

இவ்வளவுக்கும் சிங்களமொழி நடைமுறைக்கு வந்தது கி.பி. 6ம் அல்லது 7ம் நூற்றாண்டிலேயே. அதற்கு முன்னர் எழுதப்பட்ட மகாவம்சம் என்ற நூல் பாளிமொழியிலேயே எழுதப்பட்டது.

அப்போது சிங்களமொழி பிறக்கவில்லை. இந்நாட்டில் பேசப்பட்ட தமிழ் மொழியை அத்திவாரமாக வைத்து அதன் மேல் பாளிமொழியினால் அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த மொழியே சிங்களமொழி.

பாளிமொழியில் சிகல என்றால் சிங்கம். முதன் முதலில் சிகல என்ற சொல் கி.பி. 4ம் 5ம் நூற்றாண்டுகளின் படைப்பான பாளிமொழியில் வெளிவந்த தீபவம்சத்தில் குறிப்பிடப்படுகிறது.

எச்.ஏ.ஜே.ஹுலுகல்ல 1947ல் வெளிக் கொண்டுவந்த'சுற்றுலாப் பயணிகளுக்கான செய்திகள்'என்ற குறு நூலில் சிங்களவர்கள் ஒரு கலப்பு இனம் என்றும், சிங்களமொழியானது பெரும்பாலும் தமிழ் மொழியால் வளமாக்கப்பட்டது' என்றும் கூறியுள்ளார்.

முதலியார் டபிள்யு.எஃப்.குணவர்தன அவர்கள் 'சிங்களமொழியானது அடிப்படையில் ஒரு திராவிடமொழி. அதன் அடித்தளம் திராவிடம். அதன் மேல் கட்டப்பட்ட ஆரியமொழியொன்றைச் சேர்ந்தே சிங்களமொழி' என்று கூறியுள்ளார். அந்த ஆரியமொழியே பாளியாகும்.

பௌத்தத்தைக் கொண்டுவந்தவர்கள் பாவித்தது பாளிமொழியையே. ஆனால் அக்கால மக்கள் பாவித்த மொழி தமிழ். தமிழும் பாளியும் கலந்ததே சிங்களமொழி. அது 6ம் - 7ம் நூற்றாண்டுகளிலேயே மொழி அந்தஸ்தை அடைந்தது.

ஆகவே சரித்திர ரீதியாகப் பார்த்தால் மொழி ரீதியாகவும், மதரீதியாகவும் இலங்கையில் ஆதியில் குடி கொண்டிருந்தவர்கள் தமிழ் மொழிபேசிய இந்துக்களே. இந்துக்கள் என்பதிலும் பார்க்க சைவ சமயிகளே என்று கூறினால் அதுவே பொருத்தமானது.

அன்று தொடக்கம் அதாவது புத்தகாலத்திற்கு முன்பிருந்தே தற்காலத்தில் சுமார் நூறு இருநூறு வருடங்களுக்கு முன் வரையில் மேற்கில் நீர்கொழும்பில் இருந்து வடபால் நோக்கிப் பரந்து கிழக்கில் கதிர்காமம் வரையில் தொடர்ந்து வியாபித்து வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்களே.

இன்றும் வடகிழக்கு மாகாணங்களின் பெரும்பான்மையர் தமிழர்களே. சிங்கள மக்கள் என்றுமே வடக்கில் வியாபித்து வாழவில்லை. உண்மையில் 1956ம் ஆண்டு 'சிங்களம் மட்டும்'சட்டம் கொண்டு வரப்பட்ட போது வடகிழக்கிற்கு தமிழ் மொழியே உத்தியோகபூர்வ மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

இலங்கை சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை அன்று கூறியவாறு தமிழ், சிங்களம் இரு மொழிகளுக்கும் நாடு பூராகவும் சம அந்தஸ்து வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வலுக்கட்டாயமாக சிங்களத்தை ஒரேயொரு உத்தியோகபூர்வ மொழியாக இலங்கை பூராகவும் பிரகடனம் செய்தமை இலங்கையை சிங்கள பௌத்த நாடாகமாற்ற உள்ளூர ஆவலும், ஆசையும், அவர்களுக்கு இருந்தமையை எடுத்துக் காட்டுகின்றது.

அதாவது இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடல்ல. ஆனால் அதனை சிங்கள பௌத்த நாடாக மாற்றவேண்டும் என்ற ஒரு கருத்து பல சிங்கள அரசியல்வாதிகளையும் புத்தி ஜீவிகளையும் பீடித்துள்ளமை தெரியவருகின்றது.

புத்தரின் பல்லை (தாது) யார் வைத்திருக்கின்றார்களோ அவர்களே நாட்டை ஆள வேண்டும் என்ற ஒரு பரம்பரைக் கருத்து நிலவுவதை வைத்து இவ்வாறான சிந்தனை ஏற்பட்டிருக்கலாம். இதனால் தான் தெலுங்கு நாயக வம்சத்தைச் சேர்ந்த கண்டிய அரசர்கள் புத்தரின் பல்லைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு புத்தமதத்திற்கு சகல நன்மைகளையும் செய்து வந்தார்கள். கடைசி கண்டிய மன்னன் கண்ணுத்துரையே ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் என்ற பெயரை ஏற்றிருந்தான்.

ஆகவே இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடல்ல. இலங்கையின் மொத்த சனத் தொகையில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் சிங்கள பௌத்தர்கள் என்ற முறையில் இது சிங்கள பௌத்த நாடென்றால் வடகிழக்கை சிங்கள பௌத்தநாடு என்ற கருத்தமைப்புக்கு வெளியே எடுத்து அதற்கு தனித்துவமான ஒரு அடையாளத்தை வழங்குவது அவசியம். ஏன் என்றால் வடகிழக்கு தமிழர்கள் வாழும் பகுதியில்அவர்கள் பௌத்தத்தைத் தழுவி பின்னர் கைவிட்டார்கள்.

இப்போது அவர்கள் இந்துக்கள். மேலும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இங்கு வாழ்கின்றார்கள். வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது மீண்டும் அவர்கள் மத்தியில் பௌத்தத்தை திணிக்க எண்ணுவது அறமல்ல. அறிவுடைய செயலல்ல. இதனால் தான் நாங்கள் வடகிழக்கை இணைத்து தமிழ் மக்களின் தாயகப் பகுதியை அடையாளஞ் செய்து அதற்கென ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்கி அவர்களின் சுயாட்சிக்கு வழிவகுக்க வேண்டும். என்று கேட்டுவருகின்றோம்.

அந்தக் கட்டமைப்பினுள் தமிழ்ப் பேசும் முஸ்லீம்களுக்கு ஒரு தனி அலகை ஒதுக்கவேண்டும் என்றும் கேட்டு வருகின்றோம். எமக்கு அவ்வாறான ஒரு அரசியல் தனித்துவம் தரப்பட்டால் எமது அலகு சமயச் சார்பற்ற ஆனால் எல்லா சமயங்களையும் சமமாகக் கருதும் ஒரு அலகாகச் செயற்படும் என்று எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்