கண் சிமிட்டும் நேரத்தில் ஸ்டம்பிங்.. உலகக்கோப்பையில் டோனியின் பங்கு மகத்தானதாக இருக்கும்! முன்னாள் வீரர் கவாஸ்கர்


இந்திய கிரிக்கெட் உலகிற்கு டோனி ஆற்றிய பங்கு மகத்தானது என முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கர் புகழ்ந்துள்ளார்.

இங்கிலாந்தில் மே 30ஆம் திகதி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் களமிறங்குகிறது.

இந்நிலையில், இந்திய அணி கோப்பையை வெல்லும் என்றும், அதற்கு டோனியின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘டோனியின் கீப்பிங் எப்படிப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். கண் சிமிட்டும் நேரத்தில் துடுப்பாட்ட வீரர்களை வீழ்த்தி விடுகிறார்.

அதேபோல் கடைசி கட்டங்களில், பீல்டிங்கில் வீரர்களை சரியான இடத்தில் வைப்பதில் டோனி கைதேர்ந்தவர். இது பல போட்டிகளில் கோஹ்லிக்கு உதவியாக இருக்கிறது. உலகக் கோப்பையிலும் அது தொடரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.இந்திய அணியில் சிறந்த மூன்று பேர் உள்ளனர். ஒருவேளை அவர்களால் சரியாக ஆட முடியாத நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவிப்பார். 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின்போது டோனி இந்திய அணியை வழி நடத்தினார்.

அணியினர் மீது இருக்கும் சுமையை எல்லாம் குறைத்து அணியை வெற்றி பெற செய்தார். ஆகவே, டோனி போன்று ஒருவர் இந்த அணியில் இருப்பது மற்ற வீரர்களுக்கு உதவியாக இருக்கும். ஒட்டுமொத்தத்தில் உலகக்கோப்பையில் டோனியின் பங்கு மகத்தானதாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்