இந்திய அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நியமனம்!


இந்திய வெளிவிவகார அமைச்சராக, முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று மாலை புதுடெல்லியில் நடந்த நிகழ்வில் பதவியேற்றது.

இந்த நிகழ்வில், இந்திய வெளிவிவகாரச் சேவையின் முன்னாள் மூத்த அதிகாரியான, சுப்ரமணியம் ஜெயசங்கரும், இந்திய மத்திய அமைச்சராக பதவியேற்றார்.

அவர், இந்திய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக இருந்த போது, நரேந்திர மோடி அரசாங்கத்தின், வெளிவிவகாரக் கொள்கைகளில் ஏற்படும், சிக்கல்களை தீர்ப்பவராக ஜெய்சங்கர் விளங்கினார்.

அதனால், 2018ஆம் ஆண்டு அவர் இந்திய வெளிவிவகாரச் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் இந்தியப் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களில் இணைக்கப்பட்டு வந்தார்.

2015ஆம் ஆண்டு தொடக்கம், இந்திய வெளிவிவகார செயலராக இருந்த போது ஜெய்சங்கர், அமெரிக்கா, சீனா தொடர்பான இந்திய அரசின் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியவர்.

இவர், கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் முதல்நிலைச் செயலராகவும், சிறிலங்காவில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப்படையின் அரசியல் ஆலோசகராகவும் செயற்பட்டவர்.

64 வயதுடைய சுப்ரமணியம் ஜெய்சங்கர், இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் உறுப்பினராக இருக்காத நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இவர், தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்தவரும் இந்தியாவின் மூத்த சிவில் சேவை அதிகாரியும், அனைத்துலக விவகாரங்களில் வல்லுனராக இருந்தவரும், ஊடகவியலாளருமான கே.சுப்ரமணியத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

1987 ஆம் ஆண்டு இலங்கைக்கு அமைதிப்படையை கொண்டுவருவதில் இவரின் பங்கு முக்கியத்துவமாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வெளிவிவகாரச் சேவையின் முன்னாள் அதிகாரியான, எஸ்.ஜெய்சங்கர் இந்திய வெளிவிவகார அமைச்சராக, நியமிக்கப்பட்டுள்ளமை இந்திய அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்