தமிழக அரசியல் தலைவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள சீமானின் எழுச்சி


இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி அணியினர் கணிசமான வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் சிலவற்றை ஆட்டம் காண வைத்துள்ளது.

தமிழத் தேசிய அரசியலை முன்வைத்து நாம் தமிழர் கட்சியை சீமான் நடத்திவருகின்ற நிலையில் அவரின் இந்த பேரெழுச்சி சில தலைவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

குறித்த தேர்தலுக்காக பிரதான அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் பல கோடி ரூபாய் செலவு செய்து பிரச்சாரங்களை மேற்கொண்ட நிலையில் சீமான் ஏழை மக்களை மையப்படுத்தி அவர்களில் இருந்து வேட்பாளர்களை தேர்வு செய்து பிரச்சாரம் செய்து வந்தார்.

எனினும் சீமானின் இந்த அரசியல் வியூகத்தை பிரிவினைவாதம் என முத்திரை குத்தி பிரதான கட்சிகள் சில சீற்றம் வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் இம்முறை இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்று வரும் வாக்குகள் அந்த அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதுடன் தமிழகத்தில் பல தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுகுவுக்கு அடுத்த இடத்தை நாம் தமிழர் கட்சி தக்க வைத்துக் கொண்டுள்ளது.

குறிப்பாக தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகள் என பேசப்பட்ட தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் ஆகியவற்றைவிட நாம் தமிழர் கட்சி கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

தமிழகத்தில் புதிய அரசியல் சக்தியாக சீமான் விஸ்வரூபமெடுத்து வருகிறார் என்பதையே இன்றைய வாக்கு நிலவரம் வெளிப்படுத்துகிறது.

வழமையாக சீமான் பொதுக்கூட்டங்களில் பேசும் போது, நாங்களும் ஒருநாள் அதிகாரத்துக்கு வருவோம். அப்ப வேடிக்கையை பாருங்க என குறிப்பிடுவார். சீமானின் பேச்சை வேடிக்கையாக எடுத்துக் கொண்டவர்கள் இப்போது கதிகலங்கி போயிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்