மேற்குலக நாடுகளுக்கு ஸ்ரீலங்கா பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை!


சிறிலங்காவிற்கு பயணம்செய்ய வேண்டாம் என்று மேற்குலக நாடுகள் தமது பிரஜைகளுக்கு விதித்துள்ள பயணத் தடைகளை நீக்குமாறு சிறிலங்கா பிரதமர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

ஐ.எஸ் தீவிரவாதிகள் உயிர்த்த ஞாயிறு தினம் நடத்திய தொடர் தாக்குதல்களை அடுத்து சிறிலங்காவிற்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளும் பயணத் தடைகளை விதித்தன.

கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி மற்றும் அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதுவர்களுடன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அவசர கலந்துரையாடலொன்றை நடத்தினார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலுக்கு பொலிஸ் , இராணுவம் உள்ளிட்ட முப்படை அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதற்கமைய ஏப்ரல் 21 ஆம் திகதி ஐ.எஸ் ஆயுததாரிகள் நடத்தியிருந்த தற்கொலைத் தாக்குதல்களை அடுத்து ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு தொடர்பிலான அனைத்து அச்சுறுத்தல்களும் நீக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த சிறிலங்கா பிரதமர் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் படை அதிகாரிகளைக் கொண்டு தூதுவர்களுக்கு தெளிவு படுத்தினார்.

இதன்போது இனவன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் வெளிநாட்டுத் தூதுவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சிறிலங்காவில் ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி விதிக்கப்பட்ட பயணத் தடைகளை நீக்கி வெளிநாட்டு சுற்றுவாப்பயணிகள் அதிகளவில் சிறிலங்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளச் செய்ய வேண்டும் என்று உலக நாடுகளிடம் சிறிலங்கா பிரதமர் வினயமாக கேட்டுக்கொண்டார். இன்றைய சந்திப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்