கிளிநொச்சியில் பலத்த வரவேற்போடு முஸ்லிம் தலைமைகளை வரவேற்ற விடுதலைப் புலிகளின் தலைவர்


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பலத்த வரவேற்போடு எங்களை கிளிநொச்சியில் வரவேற்றார் என்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பின் பெயரில் தமிழகம் சென்று இருந்த அவர், தமிழக ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு என்று ஒரு கட்டமைப்பு இருந்தது. அவர்கள் இராணுவ மயப்படுத்தப்பட்ட ஒரு விடுதலை இயக்கம். அவர்களும் பயங்கரவாதத் தாக்குதல்களைப் ஒரு உபாயமாகப் பயன்படுத்தினார்கள்.

அவர்களின் தாக்குதல்கள் குறுகிய நோக்கத்தில் இருந்ததில்லை. தமிழ் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டன.

இராணுவ மேலதிகாரிகளை, முக்கிய அரசியல் தலைமைகளை மாத்திரம் இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் அரசியல் நோக்கங்கள் இருந்தன.

ஆனால் இப்போது நடைபெற்ற தாக்குதல்களுக்கு எந்த அரசியல் நோக்கங்களும் கிடையாது. சமூக ஆதரவும் கிடையாது.

விடுதலைப் புலிகளுக்கு என்று பெரும் ஆதரவுத் தளம் இருந்தது. இன்றும் இருக்கிறது. தமிழகத்திலும் அவர்களுக்கு என்று ஆதரவுத் தளம் இருக்கிறது.

அப்படியிருக்கின்ற நிலையில் அரச பயங்கரவாதத்திற்கு எதிர்வினையாக எங்களுடைய பயங்கரவாதத்தை மேற்கொள்ளுகின்றோம் என்று நியாயப்படுத்துகின்ற வழி இருக்கிறது. ஒரு விடுதலைச் செயற்பாட்டாளர்களாக சர்வதேச சமூகத்திற்குள்ளும் பார்க்கின்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேரடியாக நோர்வேயின் ஏற்பாட்டாளர்கள் ஊடாக சந்திக்க ஏற்பாடு செய்த போது எங்களை பலத்த வரவேற்போடு பிரபாகரன் கிளிநொச்சியில் வரவேற்றார்.

அவர் எங்களைச் சந்தித்து பேசினார். என்னையும் என்னுடைய கட்சியினரையும் வரவேற்றார். நான்கு ஐந்து மணித்தியாலங்கள் அவரோடு பேசினோம்.

ஆனால் இதெல்லாம் துரதிஷ்டவசமாக விடுதலைப் புலிகள் செய்து கொண்ட மோதல் தவிர்ப்பு உடன்படிக்கையை அவ்வப்போது உபாய ரீதியாக மீறிச் செயற்பட்டமையினால் பொறுமையிழந்து இலங்கை அரசும் யுத்தத்திற்கு போகின்ற சூழல் ஏற்பட்டது.

சர்வதேச சமூகமும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் உடன்பாடு இல்லாத சூழலில் அதற்கு மறைமுகமாகவும், சூசகமாகவும் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளை அங்கிகரித்துவிட்டார்கள் என்ற தோற்றப்பாடும் இருக்கிறது.

அதற்குப் பிற்பாடு யுத்தப்படுகொலைகள் நடந்தது, அப்பாவிப் பொதுமக்கள் காவு கொள்ளப்பட்டார்கள் என்னும் குற்றச்சாட்டு இலங்கைப் படைகளுக்கும் மேல், இலங்கை அரசுக்கு மேல் சுமத்தப்பட்டன.

சர்வதேச ரீதியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட அம்சங்கள் குறித்து போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்கின்ற நிகழ்ச்சி நிரல் இன்னமும் இருக்கிறது.

இவற்றையெல்லாம் நாம் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் பயங்கரவாதத்திற்கு மீண்டும் இந்த நாட்டை தள்ளிவிட முடியாது.

எனவே தமிழ் சமூகத்தோடு தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்