சிங்களவர்களும், தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் - அத்துரலியே ரதன தேரர்


அடிப்படைவாதத்திற்கு எதிராக பௌத்தர்களும், இந்துக்களும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார். வவுனியாவுக்கு நேற்று விஜயம் செய்த ரதன தேரர், சைவ சமய பூசகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்து கலாசார மக்களும் பௌத்த கலாசார மக்களும் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சில இடங்களில் சிகிச்சைகளின் போது குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்படியான சூழ்நிலையில், இந்து, பௌத்த ஒன்றிணைப்பு நாட்டுக்கு தேவை.ஆன்மீக ஐக்கியத்தை ஏற்படுத்தும் அபிலாஷையில் நாங்கள் வவுனியாவுக்கு வந்தோம்.

எமக்கு இருக்கும் அரசியல் பிரச்சினைகள் பின்னர் தீர்த்துக்கொள்ள முடியும். முதலில் பௌத்த மற்றும் இந்துக்கள் இணைந்து அடிப்படைவாதத்தை தோற்கடிக்க வேண்டும்.

இரண்டாவது நாடு என்ற வகையில், நாம் வீழ்ந்துள்ள இடத்தில் இருந்து நாட்டை கட்டியெழுப்ப தேசிய வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்படுவது அவசியம். இதனால், எங்களுடன் இணையுமாறு தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். இந்துக்களும் பௌத்தர்களும் இணைய எந்த தடைகளும் இல்லை.

பல இந்து தெய்வங்கள் பௌத்த விகாரைகளில் உள்ளன. நாங்கள் யாழ்ப்பாணம் செல்லும் போது பிரித் நூல் கட்டுமாறு அழைக்கின்றனர். நாம் ஏன் பிரிந்து இருக்க வேண்டும்.

நடந்து முடிந்த யுத்தம் வெளியில் இருந்து உருவாக்கப்பட்டது. உலக அரசியல் சக்திகள், நாட்டில் உள்ள அதிகார ஆசை பிடித்த அணிகள் இந்த யுத்தத்தை உருவாக்கின.

இந்த மரண பொறியில் இருந்து விடுப்பட்டு, மிக விரைவாக சிங்கள, தமிழ் மக்கள் இடையே நட்புறவை ஏற்படுத்த வேண்டும்.

முதலில் இந்து பூசகர்கள் மற்றும் பௌத்த பிக்குகள் இடையில் ஒன்றிணைப்பை ஏற்படுத்த வேண்டும்.சிங்கள மற்றும் தமிழ் வர்த்தகர்கள் இடையில் ஒன்றிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற அபிலாஷையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்