உலகின் தொன்மையான தமிழ் மொழியை பிற மாநிலங்களிலும் விருப்ப மொழியாக்குங்கள்: மோடிக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்!


உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி இருப்பதால் அதனை பிற மாநிலங்களில் விருப்பு மொழியாக பயிற்றுவிக்கவேண்டும் என்று தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ருவிற்றர் தளத்தில் பதிவு ஒன்றின் மூலமாக முதமைச்சர் இந்த கோரிக்கையினை மோடிக்கு முன்வைத்துள்ளார்.

இந்திய மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தி மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் அதேபோல, இந்தி மொழி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் தவிர பிற பகுதிகளில் ஏதேனும் ஒரு மொழியை கூடுதலாக கற்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தமிழகம், கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

இதனையடுத்து இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டது. ஆனாலும் திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டது.

இந்த நிலையிலேயே நாட்டின் பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிப்பது உலகின் தொன்மையான ஒரு மொழிக்கு செய்யும் சேவையாக இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்