மைத்திரியின் கருத்தால் வெடித்தது சர்ச்சை!அரசியலமைப்பின் 18 ஆம் மற்றும் 19 ஆவது திருத்தச் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என்று ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்துக்கள் தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக பொது வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 18 ஆவது திருத்தத்தை இரத்து செய்து 19 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

அதற்கமைய அவர் ஆட்சிபீடம் ஏறி ஒருசில மாதங்களிலேயே அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருந்த நிலையிலேயே அவரது ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு சில மாதங்கள் உள்ள நிலையில் அவரே முன்நின்று நிறைவேற்றிய 19 ஆவது அரசியல் யாப்பு திருத்தச் சட்டமூலம் காரணமாகவே நாடு ஒரு இடத்திலேயே தேங்கிக்கிடப்பதாக நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

அத்துடன் அரசியல் சாசனத்தின் 18 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தச் சட்டங்கள் நீக்கப்படும்போதே சிறப்பானதொரு ஆட்சியை முன்னெடுக்க முடியும் என்று ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் – தனக்கும் இடையே விரிசல் நிலை ஏற்படுவதற்கு இந்த இரண்டு திருத்தச் சட்டங்களுமே காரணமாக அமைந்திருந்ததாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்ரி, தங்களால் இழைக்கப்பட்ட தவறுகளை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இதேவேளை தனது 10 வருட ஆட்சியில் 18 ஆவது திருத்தம் காரணமாக எந்தவொரு பிரச்சினையும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, இதுவரைகாலமும் 1 8ஆவது திருத்தம் சிறந்தது என்று தெரிவித்துவந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தற்போது அது மிகப்பெரிய தவறு என்று உணர்ந்துகொண்டமை வரவேற்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.

கொழும்பின் புறநகரான கல்கிஸையிலுள்ள பௌத்த விகாரைக்கு இன்றைய தினம் விஜயம் செய்திருந்த மஹிந்த ராஜபக்ச பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

“ எனது ஆட்சியில் 18ஆவது திருத்த சட்டத்தால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. நாங்கள் 10 வருடங்கள் ஆட்சிபுரிந்தபோது எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. இந்த 18ஆவது திருத்தத்திற்கும் அவர் இணக்கம் வெளியிட்டிருந்தார். வாக்களித்திருந்தார். பேசியுமிருந்தார்.18ஆவது சிறந்தது என்று அப்போது விமர்சித்திருந்தார். எமது ஆட்சியில் இல்லை அவருடைய ஆட்சியிலேயே நற்சான்றிதழ் ஒன்றையும் வழங்கியிருந்தார். இப்போது நான்கரை வருடங்களின் பின்னர் 19ஆவது திருத்தமானது மிகப்பெரிய பிழை என்பதை அறிந்தமை பெரியவிடமாகும். இப்போது முழு நாடுமே சிக்கலாகியிருக்கிறது. முழு அரசியலமைப்பையும் மாற்றுவதற்கே முயற்சிக்கின்றனர். உள்நோக்கமும் இந்த அரசுக்கு உள்ளது. பிரதமரும் ஜனாதிபதியும் மோதிக்கொள்கின்ற அரசியலமைப்பு நாட்டிற்கு அவசியமில்லை”.

எனினும் மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதை அடுத்து நிறைவேற்றிய 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு மஹிந்த ராஜபக்சவும் அவரது விசுவாசிகளும் ஆதரவாக வாக்களித்திருந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரளித்த அனைவரும் இந்த சட்டத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தொடர்ந்து பேணுதல் அல்லது அதனை இரத்து செய்து நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு செல்லுதல் குறித்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் கட்சிகள் சரியானதொரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் தயாசிறி வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் 19 ஆவது திருத்தச் சட்டத்தின்று அன்று ஆதரவளித்ததன் பிரதான நோக்கம் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார 19 ஆவது திருத்தத்தை முற்றாக இரத்து செய்ய வேண்டும் என்ற ஜனாதிபதி சிறிசேனவின் கருத்திற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சோஷலிச மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஜனாதிபதியிடமிருந்து அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களை நகர்த்துவதே சிறந்தது என்றும் கூறினார்.

19ஆவது திருத்தத்தை இரத்து செய்யும் யோசனைக்கு நான் இணங்கமாட்டேன். நாடாளுமன்றத்துக்கு முழு அதிகாரத்தை வழங்குவதற்காக 19ஆவது திருத்தத்தை தொடர்ந்து முன்கொண்டுசெல்ல வேண்டும். 19ஆவது திருத்தமானது ஜனாதிபதியிடமுள்ள அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்கு நகரத்துவதே இந்த திருத்தமாகும். இந்தப் பயணத்தில் மக்கள் கருத்துக் கணிப்புக்கு செல்லாமல் மேற்கொள்கின்ற சில நிபந்தனைகள் உள்ளன. அந்த நிபந்தனைகளை கைவிட்டே உச்சநீதிமன்றம் தீர்ப்புக்களை வழங்கியிருக்கின்றது. பொது மக்கள் கருத்துக் கணிப்பு இல்லாமல் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் ஜனாதிபதியின் அதிகாரத்தில் செய்யமுடியுமான மாற்றங்கள் என்ன என்பதுதான் விளக்கம். நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்குவதற்கே அனைவரும் விரும்புகின்றனர். இன்றைய காலத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களை பிரித்து தனது அதிகாரங்களை அதிகரிப்பதற்காக பிரதமர் மேற்கொள்கின்ற சூழ்ச்சிகள் இதனைவிடவும் வித்தியாசமானவை. அதில் பிரதமரின் சூழ்ச்சிகளையும் தோற்கடிக்க வேண்டும் என்ற போதிலும் கொள்கை அடிப்படையில் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்றத்துக்கான அதிகாரங்கள் என்று பார்க்கும்போது இந்த 19ஆவது திருத்தமானது மிகவும் அவசியமானதாகும்” என்றார்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் கருத்திற்கு எதிராக கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.

அரசியலமைப்புத் திருத்தத்திலிருந்து 18 மற்றும் 19 என்பவற்றை முற்றாக நீக்கிவிட வேண்டும் என்று ஜனாதிபதி நேற்று கூறியிருந்ததை அவதானித்தோம். 19 ஆவது திருத்தத்தை பெருவிமரிசையாக இந்த அரசாங்கம் கொண்டுவந்ததை பார்த்தோம். முழு நாடுமே 19 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக அமர்ந்துகொண்டது. 19 ஆவது திருத்தத்துக்கு எதிராக நாங்கள் செயற்பட்டோம்.

உச்சநீதிமன்றத்தையும் நாடியபோது மக்கள் கருத்துக் கணிப்புக்கு விட்டு மக்களின் ஆணையை பெறவேண்டும் என்கிற தீர்மானத்தை அறிவித்தது. அதனாலேயே 19 ஆவது திருத்தத்தினால் நாட்டுக்கு ஏற்படவிருந்த மிகப்பெரிய அழிவு இந்த அளவுக்காவது தவிர்க்க முடிந்தது. ஆனால் இன்று 04 வருடங்களுக்குப் பின்னர் 19 ஆவது திருத்தத்துடன் வாழ்ந்துமுடித்த பின்னர் இப்போதாவது எங்களது நிலைப்பாட்டை ஜனாதிபதியும் புரிந்துகொண்டமையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். எனினும் ஜனாதிபதி 18 ஆவது திருத்தம் குறித்து வெளியிட்ட கருத்துக்கு நாங்கள் உடன்பட முடியாது. 1 8ஆவது திருத்தமானது ஜனநாயகத்துக்கு விரோதமானதும், ஏகாதிபத்திய ஆட்சிக்குமானதாகும் என்று விமர்சித்திருந்தார்.

உண்மைக்கதை என்னவென்றால் 18 ஆவது திருத்தமானது ஜனநாயக ரீதியிலான திருத்தமாகும். ஏன்? எமது அரசியலமைப்பில் ஜனாதிபதி ஒருவரால் மீண்டும் அப்பதவிக்கு தெரிவாகின்ற எண்ணிக்கை 02 ஆக வரையறுக்கப்பட்டிருந்தது. சிறந்த ஜனாதிபதியாக இருந்தால் அவருக்கு மீண்டும் பதவிக்கு வருவதற்கு வசதிகள் இருக்க வேண்டும். லீ குவான் யூ சிங்கப்பூரினை 30வருடங்களுக்கும் மேலாக ஆட்சிபுரிந்த படியினால் தான் அந்த நாடு முன்னேற்றம் கண்டது. மலேசியாவின் கதை இதைவிடவும் சிறந்தது. அந்த நாட்டின் மஹ்தீர் மொஹமட் பிரதமராக 23 வருடங்களாக பதவிவதித்தார். முழுநாடும் அவரை கோரிய போதிலும் ஓய்வில் சென்றார். பின்னர் அந்த நாடு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. பின்னர் 2018 ஆம் ஆண்டு 91ஆவது வயதிலும் அவரை மீண்டும் பதவியில் அமர்த்த மக்கள் தீர்மானித்தனர். எனினும் ஸ்ரீலங்காவில் அப்படியான நடைமுறைகளை மேற்கொள்ள முடியாமற்போனது. ஆகவே ஆட்சியிலிருக்க வேண்டியவரை மக்களே தீர்மானிக்க வேண்டும். அரசியலமைப்பு தீர்மானிக்கக்கூடாது” எனத் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்