உலகக்கோப்பையில் கிறிஸ் கெய்லுக்கு நடந்த அநியாயம்! கொந்தளிக்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்


உலகக்கோப்பையில் நேற்று நடந்த லீக் போட்டியில் கிறிஸ் கெய்லுக்கு தவறான அவுட் வழங்கப்பட்டதாக, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாட்டிங்காமில் அவுஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நேற்று நடந்தது. முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 288 ஓட்டங்களில் ஆல்-அவுட் ஆனது.

பின்னர், வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் லீவிஸ் ஆகியோர் களமிறங்கினர். லீவிஸ் ஒரு ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த கிறிஸ் கெய்ல், 21 ஓட்டங்களில் இருக்கும் போது ஸ்டார்க் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

அதனைத் தொடர்ந்து, அவர் ரிவியூ கோரிய போது அது அவுட் என்று தெரிய வந்தது. அதன் பின்னர் மிகவும் ஏமாற்றத்துடன் கெய்ல் வெளியேறினார். முன்னதாக கெய்லுக்கு ஒருமுறை கேட்சிலும், மறுமுறை எல்.பி.டபிள்யூ முறையிலும் அவுட் கொடுக்கப்பட்டது.

ஆனால், இருமுறையுமே அவர் ரிவியூ கோரிய நிலையில் அது நாட்-அவுட் என்று தெரிய வந்தது. இந்நிலையில், கெய்ல் அவுட் ஆகிய வெளியேறிய பின், ஸ்டார்க் அதற்கு முன்பாக வீசிய பந்து மிகப்பெரிய No ball என்பது தெரிய வந்தது.

அதாவது, கெய்ல் அவுட் ஆன பந்திற்கு முன்பு ஸ்டார்க் வீசிய பந்தை, கிரீஸுக்கு வெளியே ஒரு அடிக்கும் அதிகமாக காலை தூக்கிவைத்து வீசியுள்ளார். ஆனால், நடுவர் இதனை கவனிக்கவில்லை. ஒருவேளை நடுவர் அதனை கவனித்து No ball வழங்கியிருந்தால், அதற்கு அடுத்த பந்து Free hit ஆக இருந்திருக்கும்.
அந்த பந்தில் துடுப்பாட்ட வீரர் ஒருவர் அவுட் ஆனாலும், ஆட்டமிழந்ததாக கருதப்படாது. அவர் தொடர்ந்து விளையாடலாம். ஆனால், கெய்ல் விடயத்தில் தவறு நடந்துள்ளது. கள நடுவராக செயல்பட்ட கெஃபானே, கால்காப்பில் பந்து பட்ட உடனேயே எல்.பி.டபிள்யூ கொடுத்தார்.

இதேபோல், கேப்டன் ஹோல்டருக்கு ஒருமுறை மேக்ஸ்வெல் வீசிய பந்திலும், இன்னொரு முறை சாம்பா வீசிய பந்தும் எல்.பி.டபிள்யூ கொடுக்கப்பட்டார். இரண்டு முறையும் அவர் ரிவியூ முறையீடு செய்ததில் அது அவுட் இல்லை என்று தெரிய வந்தது.

மேலும், அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் தோள்பட்டை வரை பவுன்சர் பந்துகளை வீசினர். ஆனால், நடுவர்கள் No ball, Wide எதுவும் வழங்கவில்லை. இதனால் நடுவர்கள் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு சாதகமாக செயல்பட்டார்களா என்ற சந்தேக எழுந்துள்ளது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கெய்லுக்கு அவுட் வழங்கப்பட்டதற்கு, தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, அந்த அணி வீரர் பிராத்வெய்ட் இதுகுறித்து கூறுகையில்,

‘நாங்கள் எங்கள் ரிவியூக்கள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டியதாகிறது. ஏனெனில், ஒவ்வொரு முறை எங்கள் கால்காப்பில் படும்போதேல்லாம் நடுவர் கையை உயர்த்தி அவுட் என்கிறார். ஆனால், அவர்கள் கால்காப்பில் பட்டால் கையைத் தொங்கப்போட்டு விடுகிறார்.

கெய்ல் அவுட் தீர்ப்பு கஷ்டம்தான். ஆனால், அதனால் தோற்றோம் என்று கூற முடியாது. ஏனெனில் அவர் ஆட்டமிழந்த பிறகு, நாங்கள் 8 பேர் இருந்தோம். கெய்ல் தீர்ப்பு தொடக்கத்தை கெடுத்தது. ஆனால், ஆட்டமே அதனால் தான் போனது என்று கூற முடியாது.

ஓய்வறையில் தீர்ப்புகள் வெறுப்பைக் கிளப்பின. ஆனால், வெறுப்பை உடனடியாகக் களைந்து, அடுத்த பந்துக்கு தயாராகு என்பது தான் Message. நாங்கள் இதைத்தான் செய்தோம்’ என தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்