இரண்டு வருடத்தில் அரசியல் தீர்வு! யாழில் வெடித்த ரணில் மார்க் வெடி!!


இலங்கைத்தீவில் தலையெடுத்துவிட்ட தேர்தல் காய்சலால் நாட்டுக்குள் இருக்கும் அரசியல்வாதிகள் பரபரப்படைந்த நிலையில் காட்டுக்குள் இருக்கும் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிட்டே வன்னிலா அத்தோவுக்கும் இந்தக் காய்சல் பீடித்ததால்அவரும் எதிர்வரும் அரசதலைவர் தேர்தல் களத்தில் குதிக்கப்போவதான செய்தியை யாரோ புண்ணியவான்கள் கொளுத்திப்போட்டுவிட்டார்கள்

ஆனால் இலங்கைத்தீவின் பழங்குடிகளில் ஒரு குடியாக கருதப்படும் இந்த வேடுவர் சமூகத்தில் இருந்து அதன் தலைவருக்கு வந்த ஆசையொன்றும் தீண்டத்தகாத ஆசையல்ல. ஆசையே துன்பங்களுக்கு அடிப்படைகாரணம் என தத்துவம் உரைத்த பௌத்தத்தின் பெயரால் சண்டியப் பிக்குகளும் குண்டக்க மண்டக்க காவிகளும் அரசியல் அதிகாரங்களுக்காக ஆசைப்படும் போது வன்னிலா அத்தோவுக்கு அரசியல் ஆசை கூடாதென மறுத்துரைக்க யாருக்கும் தார்மீகமும் இல்லை.

எனினும் நாட்டில் பரவிய இந்தச்செய்தி இறுதியில் காட்டுக்கும் போனதால் பதறிய அத்தோவுக்கு பதுளை பிரதேசததுக்கு ஊடகங்களை வரவழைத்து, தான் தேர்தலில் போட்டியிடப்போவதாக கொளுத்திப்போடப்பட்ட செய்திகள் பொய்யானது என சொன்னார்.

அத்துடன் காட்டுக்குள் வாழும் ஆதிவாசிகளின் தலையாக தான் இருந்தாலும் நாட்டுக்குள் வாழும் அரசியல் விலங்குத்தலைகளுக்காக நச்சென்று ஒரு செய்தியையும் சொன்னார்.

அதாகப்பட்டது, நாட்டு மக்களுக்கு தற்போது அரசியல் என்பது அருவருப்பான விடயமாக மாறிவிட்டது. இதனால் , எந்த கட்சியாக இருந்தாலும், நாடு குறித்து சிந்திக்கும் தலைவர் ஒருவரே அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதே வன்னிலா அத்தோவின் செய்தி. ஆனால் காட்டில் இருப்பவர் நாட்டின் அரசியல் நாகரீகம் குறித்து சிந்தித்தாலும் நாட்டில் இருக்கும் முதன்மைத்தலையாரியோ அரசியல் ராஜரீகங்களைத் துறந்து மரணதண்டனை போன்ற கற்கால சிந்தனைகளுடன் நகரமுனைகிறார்.

அந்தவகையில் மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு ஆப்பு வைக்குவகையில் யாராவது நாடாளுமன்றில் பிரேரணையொன்றை கொண்டுவந்தால் அவ்வாறாக பிரேரணை கொண்டுவரப்படும் தினத்தை தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்துவேன் எனவேறு அவர் எகிறியிருக்கிறார்.

அடக்கடவுளே! தனக்கு ஒரு பிரேரணை பிடிக்கவில்லை என்பதற்காக, நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் அது குறித்து ஒரு பிரேரணையை கொண்டுவந்தால் அந்த நாளை தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்துவேன் எனக்கூறி தேசிய துக்க தினம் என்ற கருப்பொருளையே மல்லினமாக்கும் அளவுக்கு இந்த உலகில் ஒரு நாட்டின் தலைவர் ஒருவர் இருக்கின்றார் என்றால் அது சாடசாத் சிறிலங்கா சனநாயக குடியரசில்தான் இருக்கமுடியும்போல.

அதுசரி.. இலங்கைத்தீவில் 2009 இல் ஒரு தேசிய இனமே படுகொலைக்கு உள்ளாகியபோது அதனை பாற்சோறு பொங்கி வெடிகொழுத்தி ஆரவாரித்த தென்னிலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் மூழ்கித்திளைத்த முல்லாக்களுக்கும் மிஸ்டர் பீன்களுக்கும் இந்த அளவில் தானே தேசிய துக்க தினங்கள் குறித்த புரிதல்கள் இருக்கக்கூடும்.

இவ்வாறாக நாட்டில் உள்ள தலையாரி மரணதண்டனையை வாஞ்சிக்க மறுபுறத்தே இடக்குமுடக்கான கடும்போக்கு பௌத்தமுகங்கள் தமக்கு பிரியமான கோத்தா போன்ற ஆட்சியாளரைக் கொண்டுவர பிரயத்தனப்படுகின்றன.

இதேபோல இலங்கையில் அதிகம் கூக்குரல் இடும்கடும்போக்கு பௌத்த முகங்கள் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான முகங்கள் என்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்தும் இப்போது யானைகளின் முகாமில்சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுபல சேனா சண்டியர் ஞானசாரர் ரஞ்சன் ராமநாயக்கா கன்னத்தில் அறை வாங்க வேண்டிய ஒரு நாலுகால் பிராணியென வர்ணிக்க அது இப்போது சிறிகொத்தாவிலும் அதிர்கிறது.

ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து தனக்கு இருக்கும் பௌத்த வாக்குவங்கியை உரவும் என்பதால் அச்சமடைந்த ரணில் ரஞ்சன் ராமநாயகவின் கருத்து கட்சியின் தலைமைத்துவம் மற்றும் கட்சியின் கருத்திற்கு முரணானது என்பதால் அதனை நிராகரிப்பதாகவும் அதுகுறித்து தனக்கு விளக்கமளிக்வேண்டும் எனவும் அவருக்கு ஒரு கடித்ததை அனுப்யிதாக தெரிகிறது

இதற்கிடையே பௌத்த வாக்குவங்கியை இழக்காத ரணில் போன்ற முகங்கள் தமிழ்பேசும் மக்களுக்கு கரட்துண்டுகளை எறிந்தபடி வடக்கின் ஸ்கந்தவரோய கல்லூரிஅடிக்கல் வரை இன்று முன்னேறிச்செல்லும் வகையில் ஒரு கதம்பஅரசியல்களமாக இலங்கைத்தீவு மாறிவிட்டது.

தமிழ்மக்களின் முற்றத்தில்; சிறிய சிறிய கம்பெரலிய கல்முனை என கரட்துண்டுகளை எறியும் ரணில் இப்போது இன்னும் ஒரு படி ஏறி இரண்டு வருடங்களுக்குள் அரசியல் தீர்வை முன்வைப்பதாக ஸ்கந்தவரோதய முற்றத்தில் அறிவித்துள்ளார்.

அவரது கரட் துண்டு நீட்டலுக்கு தோதாக சிறுபான்மையின மக்களின் பெறுமதியான வாக்குகளே எதிர்வரும் அரசதலைவர் தேர்தலின் முடிவை நிர்ணயிக்கும் என்ற பழையபல்லவிகளும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் போன்றவர்களால் இன்று பாடப்பட்டுள்ளது

ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு தின விழாவில் ரணில் பிரதம விருந்தினராக கொலுஇருக்க தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் அருகில் அமர்ந்திருக்க இந்த பல்லவியை இழுத்துவிட்டார் விஜயகலா மகேஸ்வரன்

அத்துடன் எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் சரியான முடிவை எடுப்பதன் ஊடாக கடந்த காலத்தில் விடுபட்ட விடயங்களை எதிர்காலத்தில் நிவர்த்திக்க முடியும் என்ற தனது உபரித் கரட் துண்டையும் தமிழமக்களுக்கு எறிந்திருக்கிறார்.

2015 இல் இவ்வாறு தான் மைத்திரிக்கு தமிழர்கள் வாக்களிக்க முன்னர் கூறினார்கள். அன்று தமிழர்கள் சரியான முடிவை எடுப்பதன் ஊடாக மகிந்த காலத்தில் விடுபட்ட விடயங்களை எதிர்காலத்தில் அதாவது மைத்திரி- ரணில் காலத்தில் நிவர்த்திக்க முடியும் என்றார்கள்.

இப்போது 2019 வரை அது சாத்தியப்படாத நிலையில் மைத்திரி காலத்தில் விடுபட்ட விடயங்களை எதிர்காலத்தில் யானைகளின் முகம் ஒன்று தலையாரியாக குந்தும் காலத்தில் நிவர்த்திக்க முடியும் என நம்பிக்கை ஊட்டுகிறார்கள்.

இதற்கிடையே சிறிலங்காவின் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள ஒத்திவைப்புவேளை பிரேரணை மீது அடுத்தவாரம் விவாதங்களை நடத்தப்படவுள்ள செய்தியையும் அவதானிக்கவேண்டும்.

ஆனால் யதார்த்தமாக நோக்கினால் இன்னும் 5 வருடங்களின் பின்னர் இதேகாலத்தில் இன்னொரு தமிழ்முகமும் இதே பாணியில் கடந்த காலத்தில் (2019?) விடுபட்ட விடயங்களை எதிர்காலத்தில் அதாவது 2025 இல் நிவர்த்திக்க முடியும் என உத்தரவாதத்தை வழங்க கிளம்பக்கூடும்.

ஆகமொத்தம் ஈழத்தமிழர்களின் அரசில் கையறு நிலையை சமகால அரசியல் ஆதாயங்களுக்கு பயன்படுத்த வீட்டுக்குஅருகில் இருக்கும் தகுதியில் யானைகளும் தவறவில்லை அரசியல் புனுகுப்பூனைகளும் தவறுவதில்லை. எனினும் தமிழர்களுக்கு மட்டும் நீதி பிழைத்துக் கொண்டேயிருக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்