ப.சிதம்பரம் கைது! இரவு நடந்தது என்ன?... பழிவாங்கும் நடவடிக்கை என மகன் ஆவேசம்


ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இந்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் தனது தந்தை ப.சிதம்பரத்தின் உதவியுடன் மகன் கார்த்தி சிதம்பரம் ரூ.305 கோடி முறைகேடு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ கார்த்தி சிதம்பரத்தை கைது செய்த நிலையில் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


தற்போது அதே விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அவரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவர் வீட்டின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவரின் மீது ஏறிக் குதித்து உள்ளே சென்ற சில அதிகாரிகள் வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த ப.சிதம்பரத்தை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கைது செய்தனர்.சிதம்பரம் கைது செய்யப்பட்டபோது அவரது வீட்டு வாசலில் காத்திருந்த தொண்டர்கள் சி.பி.ஐக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

கைதுக்குப் பிறகு தன் வீட்டிலிருந்து நேரடியாக ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சிதம்பரம். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் அங்கிருந்து சி.பி.ஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இன்று காலை டெல்லியில் உள்ள சி.பி.ஐ தலைமை அலுவலகத்தில் சிதம்பரத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர். இதைத் தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்குச் சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபடவுள்ளார். கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை சி.பி.ஐ காவலில் எடுத்து விசாரிக்கக் கால அவகாசம் கேட்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையில் தந்தை கைது செய்யப்பட்டது குறித்து பேசிய கார்த்தி சிதம்பரம், இந்த வழக்கு முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட வழக்கு. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இந்த வழக்கில் அவருக்கு எந்தவித தொடர்பும் கிடையாது.

அரசியல் ரீதியாக மற்றும் சட்டபூர்வ முறையில் இதற்கு எதிராக நாங்கள் போராடுவோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு ஜோடிக்கப்பட்டு எனது தந்தையை கைது செய்துள்ளனர்.மோடிக்கு என் தந்தை மீது காழ்ப்புணர்ச்சி அதனால் அப்படி செய்துள்ளார் என கூறியுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்