சந்திரயான்-2வின் லேண்டர் விக்ரம் கண்டுபிடிக்கப்பட்டது.. மகிழ்ச்சியுடன் தெரிவித்த தமிழர் சிவன்!


இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் என்ற லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.

சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில், இந்தியா அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் என்ற லேண்டர், நிலவின் தரைப்பகுதியில் தரை இறங்குவதாக இருந்தது. ஆனால், நிலவுக்கு அருகே 2 கிலோ மீற்றர் தொலைவுக்கு சென்றபோது, அந்த லேண்டரின் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

இதனால் விஞ்ஞானிகள் உடனான கட்டுப்பாட்டை விக்ரம் இழந்தது. அதனைத் தொடர்ந்து, இஸ்ரோவின் தலைவர் சிவன் மிகுந்த வேதனையடைந்தார். பின்னர், அடுத்த 14 நாட்களில் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று அவர் தெரிவித்தார்.


இந்நிலையில், நிலவில் லேண்டர் விக்ரம் எங்கிருக்கிறது என்பது குறித்து துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்தவரும், இஸ்ரோவின் தலைவருமான சிவன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளது. நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் மூலம், லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் அதிலிருந்து தகவல் தொடர்பு ஏதும் கிடைக்கவில்லை, தொடர்ந்து முயற்சிக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்