சவுதியில் மூடப்பட்ட எண்ணெய் கிணறுகள்.. பாதியாக குறைந்த உற்பத்தி: உலக நாடுகளை அதிரவைத்த பின்னணி


சவுதி அரேபியா மீது ஹவுதி போராளி குழுக்கள் நடத்திய தாக்குதல் காரணமாக அங்கு தற்போது மொத்தமாக 50% கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து ஏமன் நாட்டில் தீவிரமான போர் நடந்து வருகிறது. அரபு வசந்தத்திற்கு பிறகு ஏமன் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அங்கு ஜனாதிபதியாக இருந்த அலி ஆபத்துல்லா சாலே பதவியில் இருந்து நீக்கப்பட்டார்

அதோடு துணை ஜனாதிபதியாக இருந்த அப்ராபுத் மன்சூர் ஹாதி ஆட்சிக்கு வந்தார். இதில் இருந்து தொடங்கிய போர்தான் இன்னும் அங்கு நடந்து வருகிறது.

ஏமன் ஜனாதிபதி மன்சூர் ஹாதி அவ்வளவு திறமையான ஆட்சியாளர் கிடையாது. இவரின் வருகைக்கு பின் ஏமன் நாட்டில் வறுமை அதிகம் ஆனது.

பொருளாதாரம் பெரிய சரிவை சந்தித்தது. மக்கள் அதிக அளவில் வேலை இழந்தனர். அதேபோல் ராணுவம் மன்சூர் ஹாதி பேச்சை கேட்காமல் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி அலி ஆபத்துல்லா சாலே பேச்சை கேட்டது.

இதனால் ஏமன் நாட்டில் புரட்சி வெடித்தது. அங்கு தற்போது ஆட்சியானது சன்னி முஸ்லீம் மக்களால் நடத்தப்படுகிறது.

இதனால் ஷியா பிரிவு மக்கள் ஆட்சிக்கு எதிராக கொந்தளித்தனர். இவர்கள்தான் ஹவுதி புரட்சி படைகள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் முன்னாள் அதிபர் அலி ஆபத்துல்லா சாலேவிற்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

ஹவுதி போர் குழு ஒன்றாக சேர்ந்து அலி ஆபத்துல்லா சாலேவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த திட்டமிட்டு போர் செய்து வருகிறது. இவர்கள் ஷியா என்பதால் இன்னொரு ஷியா நாடான ஈரான் இவர்களுக்கு உதவியாக போர் கருவிகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் ஏமன் ஜனாதிபதி அப்ராபுத் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சன்னி முஸ்லீம் நாடான சவுதி மற்றும் எஞ்சிய அரபு நாடுகள் களமிறங்கி உள்ளது.

இதில் அமெரிக்கா சவுதியின் பக்கம் இருக்கிறது. இதுதான் சவுதியில் உள்ள எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடப்பதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இந்த நீண்ட போரின் ஒரு பகுதியாக சவுதியில் இருக்கும் எண்ணெய் கிணறுகள் மீது ஹவுதி போராளி குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த சில மாதங்களாக இந்த தாக்குதல் அதிகரித்துள்ளது. முன்பு சிறிய சிறிய ஏவுகணைகளை பயன்படுத்திய ஹவுதி தற்போது அதி நவீன டிரோன்களை பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஹவுதி போராளி குழுக்களிடம் இந்த தொழில்நுட்பம் கிடைத்து இருப்பது பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று சவுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி மையங்களான அப்குவாய்க், குராய்ஸ் ஆகிய கிணறுகளில் ஹவுதி படை டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.

இதனால் அப்குவாய்க், குராய்ஸ் ஆகிய கிணறுகளின் எண்ணெய் உற்பத்தி மொத்தமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

தற்போது சவுதியின் எண்ணெய் உற்பத்தி 50% மொத்தமாக குறைந்துள்ளது. உலக நாடுகளை இந்த தாக்குதல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஈரான்தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்