கோத்தபாயவுக்கு மூன்று நாள் கெடு விதித்து பிக்கு ஒருவர் உண்ணாவிரதம்


ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை சட்டபூர்வமாக நீக்கியுள்ளார் என்பதை மூன்று நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என கோரி இங்குருவத்தே சுமங்கள தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை அவர் தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதுடன் கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்துள்ளமைக்கான உத்தியோபூர்வ சான்றிதழ்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என தேரர் கோரியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான காஞ்ச விஜேசேகர மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் தமது சமூக வலைத்தளங்களில் இரண்டு சான்றிதழ்களை பகிரங்கப்படுத்தியுள்ள போதிலும் கோத்தபாய ராஜபக்ச எந்த சந்தர்ப்பத்திலும் தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்தமைக்கான சான்றிதழ்களை பகிரங்கப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுமங்கள தேரர், “ எமது அதியுயர் தாய் நாட்டை அமெரிக்காவுக்கு காட்டிக்கொடுக்கும் கோத்தபாய ராஜபக்சவின் சதித்திட்டத்தில் இருந்து நாட்டை காப்பாற்றுவோம்” என்ற வாசகம் அடங்கிய பதாதை ஒன்றையும் வைத்துள்ளார்.