யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரை “ பிரபாகரன் சேர் ” என விளித்த சந்திரிகா!


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை “ பிரபாகரன் சேர்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விளித்துப் பேசியுள்ளார்.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற சஜித்திற்கான ஆதரவு பிரசார கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

“ நான் ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்து பத்து நாட்களிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சேருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

என்னுடைய ஆட்சிக் காலத்தில் 42 கடிதங்கள் எழுதியிருந்தேன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சேருடன் சமாதான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தேன்.

எமது நாட்டில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருந்த போது கூட நாம் அவர்களுடன் இணைந்து மக்களை மீட்டு அத்தியாவசிய உதவிகளை வாங்கியிருந்தேன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சேருடன் சமாதான முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவர் தாம் தான் வடக்கின் அரசன் தமிழீழத்தை அடைந்தே தீருவேன் என கூறினார் அதனாலேயே நாம் இறுதியில் போரை ஆரமிக்க வேண்டியிருந்தது.


விடுதலைப் புலிகளிடம் சமாதானம் பேசிய போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், யுத்தம் செய்யத்தான் போகின்றோம் என கூறியிருந்தார்.

அதுபோன்று நாங்களும் யுத்தம் செய்வோம் என கூறியிருந்தோம். ஆனால், எங்களுக்குத் தேவை, சமாதானம், ஒற்றுமை, பொது மக்கள் பாதிக்கக்கூடாதென்றே எண்ணியிருந்தோம் என்றார்.

இதேவேளை, கடந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது “ மிஸ்டர் பிரபாகரன்” என்று சந்திரிகா விளித்துப் பேசியிருந்தமையானது தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் பிரபாகரன் சேர் என்று சந்திரிகா பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது இவ்வாறு பேசி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான சூத்திரமாக இந்நடவடிக்கைகளை பார்க்க வேண்டியிருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.