டி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை? இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்


இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி 20 உலகக் கோப்பைக்கான முக்கிய வீரர்கள் அடங்கிய இந்திய அணியை, நிர்வாகம் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது என்று இந்திய துடுப்பாட்ட பயிற்சியாளர் விக்ரம் ரத்தூர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலகக் கோப்பை முடிந்ததில் இருந்து டோனி இந்தியாவுக்காக விளையாடவில்லை என்றாலும், அவர் டி-20 உலகக் கோப்பைக்கான அணியில் ஒரு பகுதியாக இருப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்பு, இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, டோனி ஒருநாள் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் டி-20 உலகக் கோப்பையை விளையாட முடியும் என்று கூறினார்.

இருப்பினும், இந்திய துடுப்பாட்ட பயிற்சியாளர் விக்ரம் ரத்தூரின் கருத்து மூலம் டோனி வரவிருக்கும் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்று தெளிவாகிறது.

நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டிக்கு முன்னதாக பேட்டியளித்த ரத்தூர், இந்திய அணியில் சீரமைப்புகள் கடைசி நிமிடம் வரை தொடரும். ஆனால் என்னைப் பொருத்தவரை மற்றும் அணி நிர்வாகத்தைப் பொருத்தவரை, உலகக் கோப்பைக்கான எங்களின் முக்கியமான வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எங்கள் அணி என்னவாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். காயம் அல்லது வீரர்கள் யாராவது மிகவும் மோசமாக விளையாடினால் மட்டுமே இந்திய அணியில் புதிய வீரருக்கு வாய்ப்பு கிடைப்பதைக் காண முடியும் என்றும் கூறினார்.

ரத்தூரின் கருத்து நம்பிக்கையுடன் இருந்த இந்திய நட்சத்திர வீரர் டோனியின் ரசிகர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.