பூமியில் கண்களுக்கு புலப்படாமல் வாழும் ஏலியன்கள்: விண்வெளி வீராங்கனை தகவல்


ஏலியன்கள் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால், அவை நம் கண்ணுக்கு புலப்படுவதில்லை என பிரிட்டனின் முதல் விண்வெளி வீராங்கனை தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானமும் அறிவியலும் பெருமளவு வளர்ச்சி அடைந்த போதிலும் இயற்கையின் எத்தனையோ விந்தைகளுக்கு பதில் இல்லை என்றே கூறலாம். மனித அறிவுக்கு எட்டாத, சொல்லால், செயலால் விளக்க முடியாத சில விஷயங்களையே அமானுஷ்யம் என்கிறோம்.

அதிலும் வானில் தோன்றுவதாக கூறப்படும் பறக்கும் தட்டுகள், ஏலியன்கள், வினோதமான உருவங்கள் போன்ற சில விந்தைகள், மனித குலத்திற்கு புரியாத புதிராகவே உள்ளன.

ஏலியன் என்ற வார்த்தைக்கு வெளியிடத்தைச் சேர்ந்தவர் என்பதே சரியான அர்த்தம். ஆனால் நாம் அந்த வார்த்தையை வேற்று கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்களை குறிப்பிட பயன்படுத்துகிறோம்.

முதன்முதலில் பறக்கும் தட்டு கி.பி 1440ம் ஆண்டு பண்டைய எகிப்தில் தோன்றியது. அன்று முதல் கடந்த வருடம் ஜூன் மாதம் 8ம் தேதி நியூயார்க் நகரில் தோன்றிய பறக்கும் தட்டு வரை பலஆயிரம் முறைகள் இத்தட்டுகள் பூமியில் தோன்றி மறைந்துள்ளன.

இந்தியாவில் முதல் முதலில் 1954ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் மான்பும் என்ற இடத்தில் 12 அடி நீளமும் சாம்பல் நிறமும் கொண்ட பறக்கும் தட்டு தோன்றியது.

ஆனால், அதிலிருந்து மனிதர்கள் கீழிறங்கி வந்ததாக இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் இல்லை. பறக்கும் தட்டுகள் இருப்பது உண்மை என அமெரிக்க கப்பல்படை கடந்த ஆண்டு காணொளி ஆதாரம் வெளியிட்டது.

பறக்கும் தட்டுகள் பூமிக்கு வந்ததாகவும் அதிலிருந்து வேற்று கிரகவாசிகள் இறங்கி வந்ததாகவும் கூறப்படுகின்றன. ஏலியன்கள் இருக்கலாம் என்றே கூறப்படுகிறதே தவிர உறுதியான தகவல்கள் இல்லை என்றே ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பூமியில் ஏலியன்கள் வாழ்ந்து கொண்டுதான் உள்ளன. ஆனால், அவை நம் கண்ணுக்கு புலப்படுவதில்லை என பிரிட்டனின் முதல் விண்வெளி வீராங்கனை டாக்டர் ஹெலன் ஷார்மன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஹெலன் ஷார்மன் (வயது 56). பிரிட்டனின் முதல் விண்வெளி வீரரான இவர் 1991ம் ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் மிர் விண்வெளி கப்பலில் பயணித்தவர் ஆவார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடையே பேசிய ஹெலன், விண்ணிலிருந்து பூமியைப் பார்ப்பதை விட அழகான விஷயம் ஏதும் இல்லை. பிரபஞ்சத்தில் பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன, அவைகளில் வெவ்வேறு விதமான வாழ்க்கை வடிவங்கள் இருக்க முடியும். பூமியில் உள்ள வாழ்க்கை முறை போன்று அங்கு இருக்காது.

அந்த வேறுபாடுகள் ஏலியன்களை நம் கண்ணுக்கு புலப்படாதவர்களாக மாற்றக்கூடும். ஏலியன்கள் தற்போதே இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

ஏலியன்கள் மனிதர்களைப் போன்று கார்பன் மற்றும் நைட்ரஜனால் உருவாக்கப்படாவிட்டாலும், அவர்கள் இப்போதே இங்கே இருக்கக்கூடும், அவர்களை நம்மால் பார்க்க முடியாது என்று கூறினார்.

சாத்தியமான பறக்கும் தட்டுகள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கான ஒரு ரகசிய அரசாங்க திட்டத்தை வழிநடத்திய முன்னாள் பென்டகன் அதிகாரி, ஏலியன்கள் பூமியை அடைந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதை நம்புவதாக கடந்த 2017ம் ஆண்டு கூறியது குறிப்பிடத்தக்கது.