புகழின் உச்சத்தில் இருக்கும் சுந்தர்பிச்சை... முதல் விமானபயணத்திற்கு தந்தை பட்ட கஷ்டம்!


உலகின் பல சாதனையாளர்களின் வெற்றிக்கதைகளை அவர்கள் மூலமாகவே கொண்டு சேர்க்கும் முயற்சியில் யூடியூப் இறங்கியுள்ளது.

இதற்காக "Dear Class of 2020" என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை யூடியூப் நடத்துகிறது. இதன் மூலம் பல சாதனையாளர்கள் தங்களது வெற்றிக்கதைகளை யூடியூபில் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் பேசியுள்ளார். அதில் இளைஞர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் வகையில் பல விஷயங்களை குறிப்பிட்டார்.

அவர் பேசும்போது, தான் முதன் முதலாக அமெரிக்கா வந்தது தொடர்பாக விவரிக்கையில், '27 வருடங்களுக்கு முன்பு நான் படிப்பதற்காக அமெரிக்கா வந்தேன். நான் அமெரிக்கா வருவதற்கான விமான டிக்கெட்டிற்காக என் தந்தை கிட்டத்தட்ட அவரின் ஒரு வருட சம்பளத்தை செலவிட்டார்.

அமெரிக்கா மிகுந்த செலவு மிகுந்த நாடு. நான் வீட்டிற்கு ஒரு நிமிடம் போன் பேச வேண்டுமென்றால் 2 டொலர்களுக்கு மேல் செலவாகும். நான் அந்த நிலையில் இருந்து தற்போதைய நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதிர்ஷ்டம் என்பதையும் தாண்டி தொழில்நுட்பம் மீதான என்னுடைய தீரா ஆசைதான் காரணம்' எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்து, பின்னர் சென்னை ஐஐடியில் பயின்றவர். கடந்த 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார்.

கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவற்றின் உருவாக்கத்திற்கும், முன்னேற்றத்திற்கும் இவர் பெரும் பங்கு வகித்தார். இதைத்தொடர்ந்து 2015ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டார்.

2017ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பெபட்டின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக சேர்ந்து, தற்போது அதற்கும் சி.இ.ஓ-வாக வளர்ந்திருக்கிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்